சரித்திர சங்கமம்: அயல் தேசத்து ஆற்றில் ஆயிரம் லிங்கங்கள்
சரித்திர சங்கமம்: அயல் தேசத்து ஆற்றில் ஆயிரம் லிங்கங்கள்
PUBLISHED ON : ஜன 05, 2026

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கம்போடியாவை ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவர், இரண்டாம் ஜெயவர்மன். இவர் ஓர் இந்து அரசர். சைவ சமயத்தைப் பின்பற்றியவர். இவரின் காலம் பொ.யு. 802 முதல் 835 வரை. கம்போடியாவில் கெமர் பேரரசை தோற்றுவித்தவர். ஜாவாவின் ஆதிக்கத்திலிருந்து கம்போடியாவை மீட்டவர். இவரின் காலத்திற்குப் பிறகு, கம்போடியா, ஜாவாவிற்கு கப்பம் கட்டுவதை நிறுத்தியது.
இவரின் முதல் தலைநகரம் ஹரிஹராலயம் (தற்போது ரொலுவோஸ் - -Roluos). இரண்டாவது தலைநகரம் மகேந்திரபர்வதம் (Mahendraparvata, தற்போது புனோம் குலென் - -Phnom Kulen). இவர் கம்போடியாவின் தந்தையாகக் கருதப்படுகிறார். தனது அரசவையில் வைணவ, பௌத்த அறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
தன்னை தேவராஜா என்று அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார். 'மன்னர் என்பவர் கடவுளின் அம்சம்' என்று அறிவித்தார். தீவிர சிவபக்தர், லிங்க வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுத்தவர். இவர் மகேந்திரபர்வதத்தில் எழுப்பிய செங்கற்களால் ஆன கோபுரங்கள், பாறைகளில் செதுக்கப்பட்ட லிங்கங்கள் இன்றும் உள்ளன. தற்போது அவை, குலென் என்ற மலைப்பகுதியில் உள்ளன. ஜெயவர்மன் முடிசூட்டு விழா, 802-ஆம் ஆண்டு இந்த மலைப்பகுதியில்தான் நடைபெற்றது.
இவருடைய மரணத்திற்குப் பிறகு, அவர் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்துவிட்டதைக் குறிக்கும் வகையில், 'பரமேஸ்வரன்' என்ற பெயர் வழங்கப்பட்டது. ஜெயவர்மன் இப்பகுதியை புனிதத் தலமாக மாற்றிய பிறகு, அவருக்குப் பின் வந்த மன்னர்களும் மலையின் புனிதத்தைப் பேணும் வகையில், ஆயிரக்கணக்கான லிங்கங்களை அங்குள்ள க்பால் ஸ்பியன் (Kbal spean river) நதியில் செதுக்கினர்.
லிங்கங்களைத் தழுவிச் செல்லும் நதி நீர், அந்த நாட்டையே புனிதப்படுத்தி வளப்படுத்துவதாக அதை ஏற்படுத்திய மன்னர்கள் (முதலாம் சூர்யவர்மன், இரண்டாம் உதயாதித்யவர்மன்) கருதினர்.
கெமர் அரசில் இருந்த பல புரோகிதர்கள், பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்றவர்கள் என்று கெமர் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்து புராணக் கதைகள், கெமர் அரசின் சிற்பங்களில் செதுக்கப்பட்டன.
ஆர்.சி. மஜும்தாரின் (Ancient Indian Colonies in the Far East: Vol. II. Kambuja -Desa) நூல், கம்போடியா மன்னர்கள் பற்றி அறிய உதவுகிறது.

