PUBLISHED ON : அக் 20, 2025

ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷர் தீபாவளியை 'தீப ப்ரதிபதா உத்ஸவம்' (Deepa Pratipada Utsava) என்ற பெயரில் கொண்டாடியதாகவும் அன்று விளக்குகள் ஏற்றி, புதியதாகத் திருமணமானவர்களுக்கு அரசர் பரிசுகள் வழங்கியதாகவும், தான் எழுதிய 'நாகானந்தா'வில் (Nagananda) கூறியுள்ளார்.
ஒன்பதாம் நூற்றாண்டில் சமஸ்கிருத்தில் எழுதப்பட்ட நூல் காவ்ய மீமாம்ஸா (kavyamimamsa). நாடக ஆசிரியரான ராஜசேகரா எழுதிய இந்த நூலில் தீபாவளி 'தீப்மாலிகா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வீடு, தெருக்களில் இரவில் எண்ணெய் விளக்குகளால் தீபம் ஏற்றுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரின் செப்புப் பட்டயம் (939-967) 'தீபோத்ஸவா' என்று தீபாவளியைக் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில், சேரநாட்டைச் சேர்ந்த ராமவர்மன் குலசேகரன், தீபாவளியைக் கொண்டாடுவதற்கு, கோயிலுக்கு நிவந்தனங்கள் கொடுத்ததாகக் குறிப்புகள் உள்ளன.
11ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தில் இருந்து வந்தவர் அல் பெருனி (Al-Biruni). இந்தியாவைப் பற்றிய தனது நினைவுக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை வட இந்திய மக்கள் அமாவாசை அன்று கொண்டாடியதாக எழுதி உள்ளார்.
1420இல் விஜயநகரத்தைச் சேர்ந்த முதலாம் தேவராயரின் ஆட்சிக் காலத்தில், இத்தாலியைச் சேர்ந்த வணிகரும் வரலாற்று ஆய்வாளருமான நிக்காலோ டி கான்டி (Niccolo de Conti) ஹம்பி நகருக்கு வந்தார். 'மக்கள் கோயில்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எண்ணற்ற எண்ணெய் விளக்குகளை ஏற்றுகிறார்கள், குடும்பங்கள் ஒன்றுகூடிப் புதிய ஆடைகளை அணிந்து, ஆடிப்பாடி விருந்துண்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பொ.யு.1520களில் இந்தியாவிற்கு வருகை புரிந்தவர் போர்த்துக்கீசியப் பயணி டொமிங்கோஸ் பயஸ் (Domingos Paese). இவர், மக்கள், அக்டோபர் மாதம் தீபாவளி அன்று வீடு, கோயில்களில் வரிசையாக நிறைய விளக்குகள் ஏற்றி, கொண்டாடியதாகவும், தெருக்கள் தீபங்களால் ஒளிர்ந்தன என்றும் கூறுகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1542ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டில், தீபாவளிக்கு அதிசரம் செய்வதற்காக அரிசி கொடுக்கப்பட்ட தகவல் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் சித்தாய்மூர் பொன்வைத்த நாதர் கோயில் செப்பேட்டிலும், தீபாவளி குறித்த செய்திகள் உள்ளன. பொ.யு.1753ஆம் ஆண்டில் அந்தப் பகுதியை ஆட்சி செய்தவர் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங். இந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் சுற்றுப் பகுதியில் உள்ள ஊர் மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, இறைவனுக்குப் பலகாரங்கள் வைத்து, தீபாவளி கொண்டாடிய தகவல் தெரிவிக்கிறது.
1799ஆம் ஆண்டை ஒட்டி வாழ்ந்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones). கோல்கட்டாவில் வசித்த ஆங்கிலேயர். தீபாவளி அன்று மரங்கள், வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார்.
தீபாவளியை இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களும் 'தீபோத்ஸவா', 'தீபாவளி', 'திவாலி' போன்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர்.