PUBLISHED ON : செப் 22, 2025

ஒரு கயிறு அல்லது ரிப்பன் துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றரை அடி நீளம் இருக்கலாம்.
அதன் இரு முனைகளையும் தலா ஒவ்வொரு கையால் பிடியுங்கள். பிடித்த பிடியை விடாமல் அந்தக் கயிற்றில் முடிச்சுப் போட வேண்டும். முடியுமா?
இந்தச் சவாலை உங்கள் நண்பர்களுக்கும் நீங்கள் விடலாம். எப்படி எப்படியோ முயற்சி செய்து பார்ப்பார்கள். ம்ஹூம்... அவர்களால் முடியாது.
கடைசியில் முடிச்சுப் போடும் விதத்தை நீங்களே செய்து காட்டி பிரச்னையை முடிச்சு விடுங்கள்.
எப்படி முடிச்சுப் போடுவது?
கை கட்டி நிற்பீர்கள் இல்லையா? அதைப் போல் கையைக் கட்டிக்கொண்டு நில்லுங்கள். இப்போது வலக்கை முன்புறமாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இடக்கை, முதுகுப் புறம் நோக்கி இருக்கும். ஒவ்வொரு கையாலும் கயிற்றின் ஒவ்வொரு முனையைப் பிடியுங்கள். இப்போது கையைப் பிரித்து சாதாரணமாக இருந்தால், கயிற்றில் முடிச்சு விழுந்திருக்கும்.