அந்தப்புரத்தில் குடியும் கும்மாளமுமாக இருப்பதை விரும்பினார் மன்னர் ஒருவர். 'இப்படி நடப்பது நியாயமில்லை' என இடித்துரைத்தார் அமைச்சர். ஆனால் மன்னரோ, 'நான் யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் அவ்வளவு தான்' என்றார் மன்னர். தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்தார் அமைச்சர்.
ஒருமுறை சிக்கலான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. மன்னர் உட்பட அதிகாரிகள் அனைவரும் தீர்வு காண முயற்சித்தனர். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. அறிவுத்திறமையால் இரு தரப்பையும் விசாரித்து நல்ல முடிவை வழங்கினார் அமைச்சர். பாராட்டிய மன்னர் விலை உயர்ந்த ஆடையை பரிசாக வழங்கினார். அதை கொண்டு தன் ஆசனத்தை துடைத்தார் அமைச்சர்.
அதைக் கண்ட மன்னர் கோபத்துடன், 'ஏன் இப்படி அலட்சியப்படுத்துகிறீர்கள்' எனக் கேட்டார். அதற்கு 'நானும் உங்களைத்தான் பின்பற்றுகிறேன் மன்னா. தாங்கள் அளித்த ஆடையை நான் அசுத்தப்படுத்தியதைப் போலவே அலுவல் நேரத்தில் குடிப்பதால் அரச பதவிக்கு களங்கம் ஏற்படுகிறது'' என்றார் அமைச்சர். தவறை உணர்ந்த மன்னர் திருந்தினார்.