இஸ்ரேலில் வாழ்ந்த ஈசாய் என்பவரின் மகன் தாவீது. இவருக்கு முன்னதாக ஈசாய்க்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். ஏழு பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார். ஆனால் கடைசி மகன் தாவீதுவிடம் ஆடுகளை ஒப்படைத்து அவற்றை மேய்த்து வரும்படி சொன்னார். ஊரை விட்டு வெகுதுாரம் தள்ளியுள்ள மேய்ச்சல் பகுதியிலுள்ள கூடாரத்திலேயே தங்க வேண்டும். இதனால் ஆடுகள் மட்டுமே நண்பர்கள் ஆயின. ஆடுகள் மீது அன்பை பொழிந்தார்.
தாவீதுவின் செயல்பாடு ஆண்டவருக்கு பிடித்துப்போக, அவனை இஸ்ரேலின் மன்னராக்க முடிவு செய்தார். சாமுவேல் என்ற தீர்க்கதரிசியை அனுப்பி, ''ஈசாய்... உங்கள் பிள்ளைகளில் ஒருவரை ராஜாவாக நியமிக்க விண்ணுலகில் இருந்து உத்தரவு வந்துள்ளது'' என்றார். அப்போதும் கூட ஏழு பிள்ளைகளை மட்டும் வரிசையாக நிறுத்திவிட்டு, சிறுவன் என்பதால் தாவீதை வரவழைக்கவில்லை. 'அவன் வராவிட்டால், உங்கள் வீட்டில் நான் சாப்பிடமாட்டேன்' என சாமுவேல் தெரிவித்த பிறகே சிறுவன் வரவழைக்கப்பட்டான். தீர்க்கதரிசியால் அச்சிறுவன் நாட்டின் மன்னராக்கப்பட்டான்.