ADDED : மார் 13, 2025 03:04 PM
மாலை நேரத்தில் கடைக்குச் சென்று விட்டு தந்தையுடன் மகள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள். மகளுக்கு தந்தையின் கையை பற்றிக் கொள்வதில் பெரிய மகிழ்ச்சி. ''அப்பா! இப்போது 'பார்வையற்றவரும் வழிகாட்டியும்' விளையாட்டில் நாம் ஈடுபடலாமா'' என ஆர்வமுடன் கேட்டாள். அவரும் சம்மதித்தார்.
''இப்போது நான் தான் பார்வையற்றவள்; நீங்கள் தான் வழிகாட்டி! என் கையை இறுகப் பிடியுங்கள்'' என்றாள். தந்தையும் பிடிக்க, கண்களை மூடியபடி நடந்தாள்.
''படிக்கட்டில் ஏறுகிறோம். நடுவில் கல் கிடக்கிறது. இடது பக்கம் திரும்பலாம்'' என்றெல்லாம் அப்பா வழிகாட்ட மகளும் நடந்தாள். வீட்டுக்கு வந்ததும் தாயிடம், '' நானும் அப்பாவும் விளையாடியபடி வந்தோமே'' என மகிழ்ந்தாள்.
''கீழே விழுந்தால் என்ன செய்வது... உனக்கு பயம் வேண்டாமா'' எனக் கேட்டாள் தாய்.
''இல்லையே! என்னை கெட்டியாக அப்பா பிடித்துக் கொண்டார். என் கால்கள் தடுமாறாமல் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்'' என்றாள். இதுபோல நம்பிக்கை உள்ளவனுக்கு இருளிலும் ஒளி கிடைக்கும்.
''நாம் நடப்பது நம்பிக்கையால் தான்! பார்வையால் அல்ல''