ADDED : ஜூன் 20, 2025 08:00 AM
தன்னுடைய நிறுவனம் எப்போதும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என நினைப்பவர் ஆரோக்கியசாமி. அதற்காக ஆட்களை தேடி தேடி பணியில் அமர்த்துவார். கைதேர்ந்த வியாபாரியான அவர் எதையும் புதுமையாக யோசிப்பார். 'உங்களைத்தான் தேடுகிறேன்' என நாளிதழில் உதவியாளர் பணிக்காக விளம்பரம் கொடுத்தார். 50 நபர்கள் விண்ணப்பித்தனர். அதில் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்தார்.
அதில் ஒருவருக்கே வாய்ப்பு. மைக்கேல் என்ற ஏழை இளைஞனும் அந்த ஐவரில் ஒருவன். எப்படியும் தேர்வு பெற வேண்டும் என ஆசைப்பட்டான். இந்நிலையில் அவர்களிடம் ' வாய்ப்பு அளித்தால் எப்படி பணி புரிவீர்கள்' எனக் கேட்டார் ஆரோக்கியசாமி.
'சரியாகச் செய்வேன், நேர்மையாக செய்வேன், காலம் தவறாமல் செய்வேன், மரியாதையுடன் செய்வேன்' ஆளுக்கு ஒரு பதிலைக் கூறினர். கடைசியாக நின்ற மைக்கேல், 'தெரியாத பணியாக இருந்தால் கற்றுக் கொண்டு செய்வேன், தெரிந்த பணியாக இருந்தால் புதியது போல அக்கறையுடன் செய்வேன்' என்றான். ஆரோக்கிய சாமி அவனுக்கே வாய்ப்பளித்தார்.