பொறாமையை விட கொடியது வேறில்லை. இது மனிதனின் மனதிற்குள் நுழைந்து விட்டால் கண்ணாடியில் கூட அவனது முகம் தெரியாது, வேறு எவனோ ஒருவனின் முகம் தெரியும். அந்தளவிற்கு நிம்மதி இருக்காது. இந்த கதை படியுங்கள். உண்மை புரியும்.
வசதியாக வாழும் எதிர்வீட்டுக்காரரைக் கண்டு பொறாமைப்பட்டான் ஒருவன். அவனிடம் ஒரு மடங்காக இருந்த பொருள், எதிர்வீட்டுக்காரருக்கு இரு மடங்காக இருந்தது. இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ அவனுக்குத் தெரியாததால் பொறாமை தீயில் வெந்தான். 'தனக்கு ஒரு மடங்காக கிடைக்கும் நன்மை, அவனுக்கு இரு மடங்காக கிடைக்கிறதே... அது போலத் தானே தீமையும் அவனுக்கு கிடைக்கும் என நினைத்தான்.
இப்படி கணக்கு பார்த்த அவனுக்கு தன் அறிவு எத்தனை மடங்கு வேலை செய்யும் என பார்க்கத் தெரியவில்லை. தனக்கு ஒரு கண்ணில் பார்வை போகட்டும் என வேண்டினான். அதன்படியே மறுநாள் அவனது ஒரு கண்ணில் பார்வை போனது. ஆனாலும் அவன் கலங்கவில்லை. எதிர்வீட்டுக்காரருக்கு இரண்டு கண்ணும் பறி போவதைக் காண ஆவலுடன் காத்திருந்தான்.
ஆனால் அவருக்கு பார்வை போகவில்லை. அதைக் கண்டு அவன் துடித்தான். 'எனக்கு மட்டும் ஏன் இப்படி' என கதறினான். ''மகனே... உனக்கு மட்டுமில்லை; பொறாமை கொண்டவர்களுக்கு இதுதான் நடக்கும். நல்லதையே நினை; நல்லது நடக்கும். மற்றவருக்கு தீமையை நினைத்தால் அது உனக்கே திரும்பும். எப்போதும் நன்மையின் கதவுகள் திறந்திருக்கட்டும்'' என்கிறது பைபிள்.