ADDED : நவ 14, 2025 08:24 AM
பள்ளி ஒன்றில் ஆண்டுவிழாவன்று இயேசுவின் பிறப்பை நாடகமாக நடத்த ஏற்பாடு செய்தார் தலைமையாசிரியர். யாருக்கு என்ன வேஷம் என்பது பற்றியும் சொன்னார்.
மேரி, சூசையப்பர், ஆடு மேய்ப்பவர்கள், மூன்று ராஜாக்கள், காபிரியேல் துாதர் என ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வேஷம் கிடைத்தது. சுமாராகப் படிப்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு என்ன வேஷம் கொடுப்பது என யோசித்தார். 'இதோ பார்... சூசையப்பர் ஒவ்வொரு விடுதியா இடம் கேட்டு வருவார். அப்போது விடுதிக்குள்ளே இருந்து வெளியே வந்து, 'இங்கே இடமில்லை'ன்னு நீ சொல்லணும். அவ்வளவு தான் உனக்கு வசனம்' என்றார். அவனும் தலையாட்டினான்.
ஒத்திகை நடந்தது. விழாவன்று நாடகம் அரங்கேறியது. கர்ப்பிணியான மேரியுடன் சூசையப்பர் விடுதியில் வந்து இடம் கேட்கும் சீன் வந்தது. சுமாராக படிக்கும் மாணவன் வெளியே வந்தான். பேசாமல் நின்றான். பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட சிரிப்பலை எழுந்தது. ஒருவழியாக வாய் திறந்த அவன், 'ஐயா... இங்கே இடம் இல்லை... ஆனா எங்க வீட்டுக்கு வாங்க. நிறைய இடம் இருக்கு' எனச் சொல்லி காண்போரை சிந்திக்க வைத்தான். கள்ளமில்லாத உள்ளம் ஆண்டவர் வாழும் ஆலயம் என்பது நிஜம் தானே!

