
ஒரு பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை மாணவன் செஸ்டர் கிரீன்வுட். கோபம் கொண்ட ஆசிரியர் , '' அரட்டை அடித்தே பொழுதை வீணாக்குகிறாய். பாடம் நடத்தும் போது 'காதில் என்ன பஞ்சா வைத்திருந்தாய்' என வகுப்பறையில் திட்டினார்.
ஆசிரியரின் பேச்சு எப்போதும் அவன் காதில் ஒலித்தபடி இருந்தது. விடுமுறை நாளில் பனிச்சறுக்கு விளையாடச் சென்றான். குளிர்ந்த காற்று காதை அடைத்ததால் கையால் பொத்திக் கொண்டான். பனிக்காற்று காதில் நுழையாததால் அவனுக்கு இதமாக இருந்தது.
கம்பி ஒன்றை வளைத்து அதன் மீது துணியால் தைத்து காதுகளை அடைக்கும் விதத்தில் தலையில் அணிந்து கொண்டான். 'காதில் பஞ்சா வைத்திருக்கிறாய்' என ஆசிரியர் சொன்னதை மனதில் வைத்திருந்த கிரீன்வுட் கண்டுபிடித்த கருவியே 'இயர் மாப்'(ear mop) என்னும் காது கவசம்.
காதிற்குள் குளிர் செல்வதை தடுக்கவும், இரைச்சல் உள்ள இடத்தில் இடையூறு இன்றி பணி செய்யவும் இதை மக்கள் பயன்படுத்த தொடங்கினர். முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட வீரர்களும் இதனை பயன்படுத்தினர். இன்றும் மக்களின் இதயத்தில் உள்ளார் கீரின்வுட்.

