நீக்ரோ தம்பதி ஒருவரை கைது செய்து ஆங்கில அதிகாரிகள் குதிரை வண்டியில் அழைத்துச் சென்றனர். அவர்களின் குழந்தையான வாஷிங்டன் கார்வரும் உடனிருந்தான். வண்டி செல்லும் போது சிறுவன் தவறி விழுந்தான். ஆனால் கதறிய தம்பதிகளை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
அழுதபடி நின்றிருந்த சிறுவனை, பெரியவர் ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றார். படிப்பு, பண்பு, பக்தியில் அவன் ஈடுபாடுடன் வளர்ந்தான். தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஆனால் அவன் நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டான்.
இந்நிலையில் அமெரிக்க விவசாயிகள் பூச்சித் தொல்லையால் பாதிக்கப்பட்டனர். ஒருநாள் இரவு முழுவதும், ' நீக்ரோ மக்களாகிய நாங்கள் ஆங்கிலேயரால் கவுரவமாக நடத்தப்பட வேண்டும்' என ஜெபம் செய்தான். இதன் பின் பட்டாணிச் செடியில் ஏற்படும் நோய்களைப் போக்கவும், வீரியமான விதைகளை உற்பத்தி செய்யவும் ஆய்வு செய்து வெற்றி பெற்றான். அதன்பின் அமெரிக்க விஞ்ஞானிகள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார் விஞ்ஞானி கார்வர். 'சிறியவனை புழுதியில் இருந்தும், எளியவனைக் குப்பையில் இருந்தும் எடுத்து உயர்த்துகிறார்' என்கிறது பைபிள்.

