ADDED : டிச 22, 2023 04:51 PM
நாட்டு மக்களை பக்கத்து நாட்டிற்கு செல்ல அனுமதிக்கமாட்டார் மன்னர். இதற்கான காரணத்தை அறிய விரும்பினார் பக்கத்து நாட்டை சேர்ந்த அறிஞர்.ஒருநாள் உண்மையை அறிய பக்கத்து நாட்டு மன்னரைக் காண வந்தார். அப்போது அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது.
அந்த வழக்கில், முதியவர் ஒருவரின் நிலத்தை விலைக்கு வாங்கி உழுத இளைஞனுக்கு புதையல் கிடைத்தது. அதை முதியவரிடம் ஒப்படைத்தான். அது உனக்கே சொந்தம் என முதியவர் மறுத்தார். இருதரப்பையும் கேட்ட மன்னர் நீங்கள் ஆறு மாதம் வெளிநாடு செல்லுங்கள். பிறகு தீர்ப்பளிக்கிறேன்” என்றார்.
இதற்கிடையில் தேடி வந்த அறிஞரையும், ஆறுமாதம் கழித்து வாருங்கள் என அனுப்பினார். ஆறுமாதம் கழித்து நிலைமை தலைகீழானது. அனைவரும் அங்கு கூடிய போது, முதியவரும், இளைஞரும் ஒரே குரலில்“ புதையல் எனக்கே சொந்தம்'' என்றனர்.
“ பேராசையை அறியாத என் மக்கள் இப்போது அதனை கற்றுக் கொண்டனர். என் நாட்டு மக்களை வெளிநாடு செல்ல ஏன் அனுமதிப்பதில்லை'' என புரிகிறதா என அறிஞரிடம் கேட்டார் மன்னர். நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருந்தால் அவர்களின் குணம் நமக்கு உண்டாகும் என்பது உண்மை.