
வேலையின்றி அலைந்த இரு நண்பர்கள் பசியால் வாடினர். ஓரிடத்தில் 'காத்திருக்கு பரிசு' என்ற போட்டிக்கான அறிவிப்பு பலகையைக் கண்டனர். அதில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.
* மனிதனின் வயிற்றை நிரப்புவது எது?
* மனதிற்கு மகிழ்ச்சி தருவது எது?
* அதிவேகமாகச் செல்வது எது?
விடையளிக்க முன்வந்தான் முதலாவது இளைஞன், ''கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பெட்டி
நிறைய பணம் இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும். வேட்டை நாய் அதிவேகமாகச் செல்லும்'' என்றான். திருப்தியான பதில் இல்லாததால் மற்றொருவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
மனதிற்குள் ஆண்டவரை சிந்தித்தபடி, ''ஐயா... உணவுகள் எல்லாம் மண்ணில் இருந்தே கிடைக்கின்றன. ஆக நம் வயிற்றை நிரப்புவது இந்த பூமி. இரண்டாவதாக அதிக மகிழ்ச்சி தருவது துாக்கம். அதுவும் உழைத்துக் களைத்த மனிதன் துாங்கி எழும் போது உண்டாகும் சுகம் அலாதியானது. அதிவேகமாகச் செல்வது மனிதனின் மனம். கண் இமைக்கும் நேரத்திற்குள் நினைத்த, விரும்பிய இடத்தை அடைந்து விடும்'' என்றான்.
பதில் திருப்தியாக இருந்ததால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. இருவரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.