
ஒரு ஊரில் இருந்த பாமர மக்கள் செருப்பு அணியாமலே நடந்து வந்தனர். இதையறிந்த ஒரு செருப்பு கம்பெனி தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து, செருப்புகளை அதிக அளவில் விற்பனை செய்யப் பணித்தது. அவரும் வந்தார், கடை விரித்தார். ஆனால், யாருமே செருப்பு வாங்க முன்வரவில்லை.
அவரும் திரும்பி விட்டார்.
அடுத்து ஒரு பிரதிநிதியை கம்பெனி அனுப்பியது. அவர் சுறுசுறுப்புடன் இயங்க ஆரம்பித்தார். ஒரு பொது இடத்தில் நின்றபடி மைக்கில் பேசினார். செருப்பு அணிவதன் பலன், பாதங்கள் சுடாமல் இருப்பதால், உடலுக்கு ஏற்படும் குளிர்ச்சி, கால்களில் கிருமி படியாமல் பாதுகாக்கப்படும் தன்மை ஆகியவை குறித்து பேசினார்.
மக்கள் அதைக் கேட்டனர். அப்படியும் மக்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. பிரதிநிதி சோர்ந்து போகவில்லை.
ஒருநாள் தடாலடியாக, ''தன் கடைக்கு காலை ஒன்பது மணிக்குள் வரும் முதல் பத்து பேருக்கு இலவசமாக காலணி வழங்கப்படும்,'' என தட்டிபோர்டு வைத்தார். அவ்வளவு தான்! மக்கள் வேகமாகச் செல்ல ஆரம்பித்தனர். இலவசமாக
வாங்கியவர்கள் அடைந்த பலனைப் பார்த்து மற்றவர்கள், விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தனர். பிரதிநிதி செருப்புக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, இலவசமாக கொடுத்த செருப்புகளுக்குரிய பணத்தையும் சம்பாதித்து விட்டார்.
பின்னர் கம்பெனியில் இருந்து பல ரக செருப்பு, ஷூக்களை வரவழைத்தார். செருப்பு போட்டவர்கள் பாதுகாப்பான ஷூக்களை வாங்க ஆரம்பித்தனர்.
நிரந்தரமாக ஒரு கடையும் அங்கு தொடங்கப் பட்டது.
''சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்,'' என்று பைபிள் சொல்கிறது. ஆம்! உழைப்பு, முயற்சி, புத்திசாலித்தனம் ஆகியவை இருந்தால் வெற்றிப்படிகளில் ஏறலாம்.