
இயேசுவின் முள்கிரீடம் அவருக்கு பரிசாகத் தரப்பட்ட தோட்டத்தில் வளர்ந்த முட்செடியில் இருந்தே செய்யப்பட்டது' என்ற தகவலை ஒரு கதை உறுதிப்படுத்துகிறது.
சிமியோன் என்பவன் தனக்கு தொழுநோய் இருப்பதாகவும், அதை குணமாக்கித் தரும்படியும் இயேசு கிறிஸ்துவிடம் முறையிட்டான்.
'ஆண்டவரே! இந்த பயங்கரமான நோயில் இருந்து எனக்கு விடுதலை தாரும்,'' என்றான். அவர் அவனிடம், ''உன்னைச் சுத்தமாக்க (குணப்படுத்த) எனக்கு வல்லமை உண்டு என விசுவாசிக்கிறாயா?'' என்று கேட்டார்.
அவனும், ''ஆம் ஆண்டவரே! உம்முடைய வல்லமையால் என்னைக் குணமாக்க உம்மால் ஆகும் என விசுவாசிக்கிறேன்,'' என்றான்.
''நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது. உன் தொழுநோய் நீங்கி சுகம் பெறுவாயாக,'' என்றார் இயேசு. அப்படியே அவனும் சுகம் பெற்றான்.
சிமியோன் இயேசுவிடம், ''ஆண்டவரே! என்னைக் குணமாக்கியதற்கு நன்றிக் காணிக்கையாக நான் ஒரு சிறிய திராட்சைத் தோட்டத்தைத் தருகிறேன். அதை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று வேண்டினான்.
அது தனக்கு வேண்டாம் என இயேசு சொன்னார். ஆனாலும், அவன் வற்புறுத்தி அதை அவரிடம் கொடுத்து விட்டான்.
அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி இருந்தது. அதை முழுமையாக அகற்றிவிடும்படி அவர் சீயோனிடம் சொன்னார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் வேரோடு அதை அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்று விட்டனர். எனவே, அந்தச் செடி மீண்டும் முளைத்து விட்டது.
பிற்காலத்தில், இயேசுவின் மீது பல புகார்களைக் கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன், இயேசுவின் தோட்டத்திற்குச் சென்று, அந்த முள்செடியை வெட்டி அதைக் கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் வைத்து அழுத்தினான். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது.
சிமியோன் அழுது புலம்பினான்.
'ஆண்டவர் சொன்னபடி, முழுமையாக அந்தச் செடியை அகற்றாமல் விட்டுவிட்டேனே,'' என புலம்பினான்.
நம் தவறுகளையும், பாவங்களையும் வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது நம்மையே திருப்பித் தாக்கும்.
'தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து, விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்,'' என்கிறது பைபிள்.
உங்கள் செயல்பாடுகளில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். கவனம் தவறினால் அது பெரும் சிரமத்தைத் தரும்.