/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
எதற்கும் காலம் உண்டு பொறுத்திரு மகனே(ள)
/
எதற்கும் காலம் உண்டு பொறுத்திரு மகனே(ள)
ADDED : ஆக 25, 2015 02:07 PM

ஒரு காட்டில் மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆசை இருந்தது. முதல் மரம் தன்னை தங்கமும் வைரமும் வைக்கும் பெட்டியாக மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டது.
இரண்டாவது மரம் மகாபிரபுக்கள், மன்னர்கள் பயன்படுத்தும் கப்பலாக மாற வேண்டும் என எண்ணம் கொண்டது.
கடைசி மரம், விண்ணை முட்டும் அளவு வளர்ந்து கடவுளே தன் மீது இளைப்பாற வேண்டும் என விரும்பியது.
சில நாட்களில் எல்லா மரங்களும் வெட்டப்பட்டன. முதல் மரம் அது நினைத்தது போலவே பெட்டியாக்கப்பட்டது. ஆனால், நகைப்
பெட்டியாக அல்ல. மாடுகளுக்கு தீவனம் வைக்கும் பெட்டியாக மாற்றப்பட்டது. தன் நிலைமைக்காக அது மிகவும் வருந்தியது.
இரண்டாவது மரம் நினைத்ததுபோல கப்பலாக மாறாமல் படகாக மாறியது. ஆனால் மன்னர்களின் பொழுதுபோக்கு படகாக அது அமையவில்லை. மீன் பிடிக்க பயன்பட்டது. தனது நிலைமைக்காக அந்த மரமும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
மூன்றாவது மரத்தை வெட்டியவர்கள் ஒரு ஓரமாக போட்டு விட்டனர். தான் எந்த பயனும் இல்லாமல், நினைத்ததுபோல வானை முட்டும் அளவுக்கு வளரவும் முடியாமல் போயிற்றே என அது அழுது கொண்டிருந்தது.
சில ஆண்டுகள் கடந்தன. ஒருமுறை ஒரு கர்ப்பிணிப்பெண் தன் கணவருடன் அந்த மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தாள். ஊரில் எங்கும் இடம் இல்லாததால் முதல் மரம் மாட்டுக்கு உணவு வைக்கும் பெட்டியாக மாறியிருந்த தொழுவத்திற்கு வந்தனர். அங்கேயே தங்கினர். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மாடுகளுக்கு தீவனம் வைக்கும் பெட்டியில் அந்த குழந்தையை படுக்க வைத்தார்கள். இப்போது அந்த தொழுவத்தை தேடி தேவ தூதர்களே வந்தார்கள். இயேசுபிரானே அவதரித்து அந்த பெட்டியின் மீது படுத்திருந்தார். அந்த மரத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
நகைப்பெட்டியாக மாறியிருந்தால் கூட பணக்காரர்களின் பார்வை மட்டுமே தன்மீது பட்டிருக்கும். இப்போது தேவ தூதர்களின் பார்வை பட்டதால், பெரும் பயனை எய்தியதாக அது கருதியது.
கடவுள் நமது ஆசைகளைப் பூர்த்தி செய்யவில்லையே என வருத்தப்படக்கூடாது. அவர் நிச்சயமாக நமது நல்ல நோக்கங்களைப் பூர்த்தி செய்வார். அதற்கான காலம் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
'சீட்டு மடியிலே போடப்படும், காரிய சித்தியோ கர்த்தரால் வரும்' என்ற பைபிள் வசனத்தின்படி கடவுளால் நமது நல்ல நோக்கங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பதை நினைவில் கொள்வோம்.