பிரிட்டனில் வசித்த ஒரு இளைஞன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குதிரை பந்தய மைதானத்திற்கு சென்று விடுவான். சரியான குதிரையைக் கண்டறிந்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதித்தான். ஆனால்,என்ன காரணத்தாலோ அவன் உள்ளத்தில்
மகிழ்ச்சி இல்லை.
ஒருமுறை போதகர் ஒருவர் செய்த பிரசங்கத்தைக் கேட்டான். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்காக தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்ட விஷயம் அவன் மனதை மிகவும் கவர்ந்தது. அன்று முதல் அவன் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வதை விட்டுவிட்டான்.
ஆனால், பொல்லாத மனம் அவனைத் துன்புறுத்தியது. 'ஒவ்வொரு ஞாயிறும் இப்படி நீ பைபிளும் கையுமாக கிடந்தால் பணம் எப்படி கிடைக்கும்? இந்த பைபிளை புரட்டும் சமயத்தில், 'பந்தய டிப்ஸ்' புத்தகத்தை புரட்டினால் பணம் ஏராளமாக கிடைக்குமே,'' என்று எண்ணம் பிறக்கும். அப்படிப்பட்ட சமயங்களில், அவன் அறைக்கதவை பூட்டிக்கொண்டு ஆண்டவரையே சிந்தித்து, மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டான்.
''ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின'' என்ற பைபிள் வசனம் அவனைப் பொறுத்தவரையில் நிஜமாகிவிட்டது. கெட்ட பழக்கங்களின் தாக்கத்தை குறைக்க இறை சிந்தனையே சிறந்த மருந்து.