ADDED : பிப் 19, 2014 02:31 PM

லண்டன் மாநகர ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில், ஒரு தாயும், அவளது பத்து வயது மகளும் ரயிலில் இருந்து இறங்கி, வீதி வழியாக நடக்கத் தொடங்கினர். அதிகக் குளிர் அடித்துக் கொண்டிருந்தது. காலைப் பொழுதில் வீதியோரத்தில் ஒரு ஏழை மனிதன் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
அந்த தாய் தன் மகளிடம், சில சில்லறைக் காசுகளைக் கொடுத்து, ''இதை அந்த தாத்தாவுக்கு கொடு,'' என்றாள். மகளும் அந்த
மனிதனிடம், ''தாத்தா! இதோ காசு'' என்று கூறி தன்னிடமிருந்த பணத்தை அவரிடமிருந்த பாத்திரத்தில் போட்டு விட்டு நகர்ந்தாள்.
கொஞ்சதூரம் நடந்து சென்ற தாயும், மகளும் திரும்பிப் பார்த்தனர். அந்த மனிதர், தங்களைப் பின்தொடர்ந்து வருவதைக் கவனித்தனர்.
''ஐயா! என்ன வேண்டும்?'' என்றனர்.
அவர் சொன்னார் ''அம்மா! இது நாள் வரை என்னை ஒருவரும் தாத்தா என்றோ, மாமா என்றோ அழைத்ததில்லை. இந்த பெண் என்னை தாத்தா என அன்போடு அழைத்தாள். அவளை இன்னும் ஒருமுறை அப்படி என்னைக் கூப்பிடும்படி கூறுங்கள்,'' என்று ஏக்கத்துடன் சொன்னார்.
இந்த சம்பவம் மூலம் ஒரு <உண்மையை நாம் உணர வேண்டும்.
இந்த உலகில் அன்புக்காக, ஆதரவு நிறைந்த ஒரு வார்த்தைக்காக, கனிவோடு கூடிய ஒரு பார்வைக்காக ஏங்கி நிற்கும் அனேகர், நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளைப் பேச வேண்டும். நம்மிலும் கீழானவர் என்பதற்காக, அவர்களை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது. பிச்சைக்காரன் என்று அழைத்து அவர்களது மனதைப் புண்படுத்தக்கூடாது. பைபிளும் இக்கருத்தை தெளிவாய் எடுத்துரைக்கிறது.
தேவனுடைய பார்வையில் பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சிறியவன், ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. அவர் பாரபட்சம் பாராத தெய்வம். ஆகவே, அவரை பின்பற்றுகின்ற ஒவ்வொரு மனுஷருக்கும் அவரைப் போன்ற பார்வை அவசியம் தேவை.