ADDED : பிப் 25, 2014 05:05 PM

ஒரு பெரிய கல்லூரி பொருளாதார நிலைமையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. முதல்வர், பேராசிரியர்கள் அதிக வருத்தத்துடன் காணப்பட்டனர். ஒருநாள், அறிமுகம் இல்லாத ஒரு மனிதன் கல்லூரி வளாகத்திற்குள் வந்தார். அங்கு சுவரைக் கழுவிக் கொண்டிருந்த பணியாளரிடம், ''நான் கல்லூரி முதல்வரைக் காண வேண்டும்'' என்றார்.
பணியாளரோ,''இப்போது முதல்வரைப் பார்க்க முடியாது. மதிய வேளையில் அவரது அலுவலக அறைக்கு செல்லுங்கள்,'' என கூறி விட்டு பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
மதியம் அலுவலக அறையில் நுழைந்த புதிய நபர் திடுக்கிட்டார். அங்கே முதல்வராக அமர்ந்திருந்த நபர், காலையில் சுவரைக் கழுவிக் கொண்டிருந்த அதே நபர். முதல்வரின் தாழ்மையைக் கண்டு பிரமித்துப் போனார் அவர். கல்லூரியின் நிர்வாகம் குறித்து விசாரித்தார்.
நிலைமையைச் சீர்படுத்த மிகப்பெரிய தொகை தேவை என்பதை அறிந்து கொண்டார். மறுவாரம் கல்லூரிக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் கல்லூரிக்கு தேவையான தொகை நன்கொடையாக வந்திருந்தது. முதல்வரின் தாழ்மையைக் கண்டு வியந்த புதிய நபர், அதை அனுப்பியிருந்தார்.
தாழ்மை என்பது தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையோடும், மனுஷரிடத்தில் அன்பாகவும் நடந்து கொள்வது. தேவனே சர்வத்தையும் ஆளுகை செய்கிறவர் என்பதை அங்கீகரித்து மனத்தாழ்மையோடும் இருப்பதாகும்.
மனத்தாழ்மையோடு கூடிய அன்பு பலவீனம் அல்ல. அதுவே பலம், தைரியத்தையும் கொடுக்க வல்லது. இயேசு கிறிஸ்து, நாம் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும் என்று உபதேசிக்கிறார்.(மத்:5:5, 11:29). கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தாழ்மையை தரித்துக் கொள்ள வேண்டும்.(2 கொரி.10:1, கலா.5:23, எபே.4:1-2) பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.(நீதி.3;34)
- பரமன்குறிச்சி பெவிஸ்டன்