
புதிதாக திருமணமான தம்பதியர் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் நகரத்திற்கு கிளம்பினர். வழியில் சாலையோரத்தில் வியாபாரம் செய்தவரிடம் பேரம் பேசி ஐந்து ரூபாய் குறைத்து இளநீர் வாங்கி குடித்தாள் அமலா. பின்னர் சற்று தள்ளி நின்ற பழக்கடைக்காரரிடமும் இவ்வாறு செய்து பழங்களை வாங்கினாள். அன்றாடம் உழைத்து பிழைக்கும் இவர்களிடம் இப்படி நடந்து கொள்ளாதே என சொல்ல கணவனுக்கு தயக்கமாக இருந்தது. அன்று மாலை பெரிய ஷாப்பிங் மாலில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர். அதற்கான பில்லை கொடுத்தவரிடம் தொகையை குறைத்து பில் தாருங்கள் என்றார் கணவர். இதைக்கேட்ட அவள் அவரிடம் எரிச்சல் பட்டு மொத்த தொகையை எப்படி குறைப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா என்றாள். சாலையோர வியாபாரிகள் விலையை குறைக்கும் போது என வாய் திறந்து கணவன் சொல்ல வரும் விபரம் புரிந்தது. மன்னிப்பு கோரிய அவளுடன் அடுத்த பெரிய ஷாப்பிங் மாலுக்கு புறப்பட்டனர்.