/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
வாழ்க்கையில் முன்னேறலாம் வாங்க...
/
வாழ்க்கையில் முன்னேறலாம் வாங்க...
ADDED : ஜன 26, 2022 05:06 PM

இன்றைய காலத்தில் ஒருவருக்கு கல்வியே முக்கிய தேவையாக உள்ளது. வளரும் நாடுகளில் சாதாரண மனிதனை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு. ஒருவர் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறும். அப்படிப்பட்ட கல்வியின் சிறப்புகளை குறித்து அறிஞர்கள் சொல்வதை கேளுங்கள்.
* கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெண் அவரிடம், ''ஐயா... என் குழந்தை எப்போது கல்வி கற்க ஆரம்பிக்க வேண்டும்'' எனக்கேட்டாள்.
''குழந்தைக்கு என்ன வயது'' என அரிஸ்டாட்டில் கேட்டதற்கு, ''ஐந்து வயது'' என பதில் கிடைத்தது.
''ஐந்து வயதா.. அப்படியானால் சீக்கிரம் வீட்டுக்கு ஓடு. இப்போதே ஐந்து வருடம் தாமதம் ஆகிவிட்டது. உடனே படிக்க ஆரம்பிக்கட்டும்'' என்றார்.
* விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனிடம், ''உங்களுடைய அறிவின் ரகசியம் என்ன'' என்று ஒருவர் கேட்டார்.
''அதில் என்ன ரகசியம் உள்ளது. எனக்குத் தெரியாததைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்'' என்றார்.
* அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆப்ரகாம் லிங்கனிடம், ''படிப்பதால் பணம் கொட்டப்போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்..'' என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், ''நான் பணம் சேர்ப்பதற்காக படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படி பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக படிக்கிறேன்'' என்றார்.
பார்த்தீர்களா... கல்வி என்பது வெறும் பள்ளி, கல்லுாரி படிப்புடன் மட்டும் முடிவதல்ல. அறிவை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்கள், புத்தகங்கள் என்று அனைத்தையும் படிக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும்