
நம் எல்லோரது வாழ்விலும் ஆயிரம் ஆயிரம் பிரச்னைகள். ஒரு பிரச்னை தீர்ந்தால் போதும். அடுத்த பிரச்னையை கையில் எடுத்துவிடலாம். அந்த அளவிற்கு பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வரிசையில் பலர் பிறரது விமர்சனத்தையும் சேர்க்கின்றனர். இதுவெல்லாம் ஒரு மேட்டரா.. என்ற வரிசையிலும் சிலர் நிற்கின்றனர். இப்படிப்பட்ட வரிசையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கனும் நின்றார் என்றால் ஆச்சர்யம் ஏற்படுகின்றதல்லவா... வாருங்கள் அவர் எந்த வரிசையில் நின்றார் என்று பார்ப்போம்.
லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. இவர் அரசு அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இவர் மீது கோபப்பட்ட அரசு அதிகாரி 'குரங்கு மூஞ்சி' என்று திட்டிவிட்டார். இந்த இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்... உடனே அவர் சட்டையை பிடித்து 'என்ன சங்கதி' என கேட்டிருப்போம் அல்லவா... ஆனால் அவர் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்லவர் அப்படி ஒரு செயலை செய்வதில் ஆச்சர்யம் இல்லையே. காலம் உருண்டோடியது. ஜனாதிபதி இருக்கை லிங்கனை வாருங்கள் என வரவேற்றது. அருகில் அமர்ந்திருந்தார் லிங்கனை திட்டிய அதிகாரி. அந்த அதிகாரிக்கோ 'நம் இருக்கை நம்மைவிட்டு சென்றுவிடுமோ' என்ற பயம். கடைசியில் அதிகாரியை இதைவிட பெரிய இருக்கையில் அமரவைத்தார் லிங்கன். அதாவது அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
லிங்கன் உண்மையில் மனிதர்தானா... என்று பலர் யோசிக்கும்போது, சிலர் அவரிடம் இதற்கான விளக்கத்தை கேட்டனர்.
''அவர் என்னை அவமானப்படுத்தியதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் அவரது சொல் அம்புகள் என் இதயத்தை துளையிட்டன. அந்த காயத்தை ஆற்ற என்னை மேலும் தகுதிப்படுத்த விரும்பினேன். அதற்காக முயற்சித்தேன். உழைத்தேன். வெற்றியை ருசித்தேன். அதற்கான நன்றியை காணிக்கையாக்கினேன். பதவியை வழங்கினேன்'' என்றார் லிங்கன்.
அவமதித்தவர்களை பழிவாங்கத் துடிப்பது மிருகத்தனம். அவமதித்தவரையே மதிப்பாக நடத்துவது மனிதத்தனம். அவமானத்தை முன்னேற்றத்துக்கான மூலதனமாக்குங்கள்.