/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது!
/
வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது!
ADDED : மார் 24, 2022 05:08 PM

தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில் செய்வது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் கொரோனா வந்ததுதான் வந்தது சவால்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இதனால் தொழில் செய்வோரின் மனம்தான் இதற்கு முதலில் பலியாகிறது. அந்த மனதை சரிசெய்தாலே போதும் எந்தவொரு பிரச்னையும் தீர்ந்துவிடும். மனதிற்கு அவ்வளவு சக்தி உள்ளது. ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியுமா... என்றால் தெரிவதே இல்லை. இப்படி நம்மைப்போல் சராசரியான ஒருவர் தொழில் நஷ்டம் ஏற்பட்டால் அவர் என்ன செய்வார் பாவம். அவர் மனம்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். களைப்பாக இருந்ததால் திண்ணை ஒன்றில் அமர்ந்தார். விரக்தியின் உச்சத்தில் நின்ற அவருக்கு அங்கு நடந்து செல்பவரை பார்க்கவே இஷ்டமில்லை. இருந்தாலும் எதிரே இருந்த குப்பைத்தொட்டியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், குப்பைத்தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றார். சிறிது நேரம் சென்றது. மீண்டும் ஒருவர் வந்து பாட்டில்களை கொண்டு சென்றார். கடைசியில் பசு ஒன்று வந்து எச்சில் இலைகளை சாப்பிட ஆரம்பித்தது.
அதைப் பார்த்தவர் ஒரு கோடி மின்னல் ஒன்றாக வந்து வெளிச்சம் கொடுத்ததைபோல் உணர்ந்தார். சிறிய குப்பை தொட்டியே இத்தனை பேருக்கு வாழ்வு கொடுக்கிறது என்றால்... என்னால் ஏன் முடியாது என எண்ணினார். எழுந்தார். அவரது கால்கள் சக்கரம்போல ஓட ஆரம்பித்தன. கூடவே அவரது இலக்கும் அதனுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தது.
பார்த்தீர்களா... பரந்து விரிந்து இருக்கும் இந்த உலகில் எத்தனை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏதாவது ஒன்றில் தோற்றால் ஏதோ வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள். இதைவிட பெரிய வெற்றி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. யாருக்கு எங்கே வாழ்க்கை தொடங்கும். இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. இதுவே வாழ்க்கையின் வேர்களாக இருக்கிறது.