ADDED : டிச 03, 2013 02:09 PM

யூதர்கள், கல்யாண விருந்தை ஏழு முதல் பத்து நாட்கள் வரை நடத்துவர்.அதிலும், ராஜ குடும்ப திருமண விருந்து என்றால் கேட்கவே வேண்டாம்.
ஒரு ராஜா விருந்திற்கு உறவினர்களை அழைத்தான். அவர்கள் சாக்குபோக்கு சொல்லி வர மறுத்தனர். பின்னர், ராஜா தன் ஏவலர்களிடம், 'தெருக்களில் நிற்பவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விருந்தளியுங்கள்' என்று சொல்ல, அப்படியே செய்தார்கள்.
யூதர்கள் திருமணவிருந்துக்கு வந்தால், கல்யாண வஸ்திரம் (ஆடை) அணிய வேண்டும் என்பது விதி. ஆனால், ஒருவர் அதை அணியவில்லை.
ராஜா அவனிடம்''சிநேகிதனே! நீ கல்யாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய்?'' என்று கேட்டான். அதற்கு அவன் பேசாமல் இருந்தான். அப்போது ராஜா பணிவிடைக்காரரை நோக்கி, ''இவனை கையுங்காலுங் கட்டிக் கொண்டு போய், அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்,'' என்றான் (மத்தேயு 22:11-3)
விருந்திற்கு அழைத்தவரே விருந்தினருக்கு தண்டனை தருவது கேள்விக்குரியதல்லவா?
இந்தக் கதையை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் சில விஷயங்கள் தெளிவுபடும். இந்த விருந்தானது திருமண விருந்து என அழைக்கப்பட்டாலும், உண்மையில் இது நிச்சயதார்த்த விருந்து. இத்தகைய விருந்திலே பெண் பார்ப்பதும், பின் திருமண
நிச்சயம் செய்து விருந்து கொடுப்பதும் மரபு. இப்படிப்பட்ட விருந்திற்காக ஒரு விசேஷ உடையை யூதர்கள் அனைவரும் வைத்திருப்பர். இல்லையெனில், திருமண மண்டபத்திலுள்ள அறைகளில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே திருமணத்திற்கென விசேஷ உடையை தனித் தனியே வைத்திருப்பர். திருமணத்திற்குச் செல்பவர்கள், ஒரு வேளை தன் வீட்டில் கல்யாண உடை இல்லாவிடில், திருமண விருந்து மண்டபத்திலிருந்து தங்களுக்குப் பொருத்தமான ஆடையை எடுத்து, உடுத்திக் கொண்டு விருந்து மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். கல்யாண உடை உடுத்தாமல் விருந்து மண்டபத்திற்குச்
சென்றால் தண்டனையிலிருந்து தப்ப இயலாது என்பது யூதர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே தான் ராஜா கேட்ட போது, அவன் பேசாமல் இருந்தான் என்று சொல்கிறது வேதம். விருந்து மண்டபத்திற்குச் செல்பவன் கட்டாயம் விசேஷ உடைஉடுத்த வேண்டும் என்பது தண்டனைக்குட்பட்டவனுக்கு தெரியும்.
''நீ உடுத்திக் கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும், என்னிடத்தில் வாங்கிக் கொள்ளவும்''(வெளி3:18) என்று கடவுள் ஆலோசனை சொல்கிறார். கேட்டுக் கொண்டு வஸ்திரம் பெறுபவன் தான், தேவனுடைய ராஜ்யத்திற்கும், அவர் அளிக்கும் விருந்திலும் பங்கேற்க முடியும்.
நீதியான அந்த வஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ள உங்களுக்கு விருப்பமா? தருவதற்கு கடவுள் தயாராக இருக்கிறார்.