ADDED : அக் 01, 2013 12:21 PM

எல்க்கானா...கிறிஸ்துவத்தில் அதிகம் அறியப்படாத பெயர். ஆனால், இவனைப் போல் சிறந்த கணவனை உலகம் இனி காண்பது அரிது.
எல்க்கானாவுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி பெனின்னாள். அவளுக்கு குழந்தைகள் உண்டு. இரண்டாவது மனைவி அன்னாள். குழந்தை பெறாதவள். இதைப் பயன்படுத்திக் கொண்ட மூத்தவள், அன்னாளை அவமானப்படுத்திக் கொண்டே இருப்பாள். அன்னாள் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும். அந்த குடும்பத்தில், இப்படி ஒரு சமாதானமற்ற நிலை இருந்தது.
எல்க்கானாவுக்கு தர்மசங்கடமாக இருக்கும். ஆனாலும், என்ன செய்வது! அன்னாளுக்கு அவன் ஆறுதல் சொல்வான். குழந்தை பெறாதவள் என்பதற்காக அவளை எந்த வகையிலும் குறைவானவளாக நடத்தியதில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவன், தேவன் குறிப்பிட்ட சீலோ (யோசு18:1) என்ற இடத்திற்கு தேவனை வணங்கவும், அவருக்கு பலியிடவும் சென்று வருவான். அப்போது அவன், இரண்டு மனைவிகளையும் அழைத்துச் செல்வான். ஆகவே பலியிடும் நாளிலே, அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்.
பெனின்னாள் அவள் மனதைக் கஷ்டப்படுத்தினாலும், ''அன்னாளே! ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? பத்துக்
குமாரரைப் பார்க்கிலும் நான் <உனக்கு அதிகமல்லவா?'' (வ.8) என்று சொல்லி அவளைத் தேற்றுவான். அப்படிப்பட்ட அன்பை பிள்ளைகளிடமிருந்து கூட எதிர்பார்க்க முடியாது. உண்மையிலேயே எல்க்கானா ஒரு வேறுபட்ட மனிதன் தான்.
ஒருவழியாக, கர்த்தர் அவளை ஆசிர்வதித்தார். அன்னாளுக்கு ஒரு ஆண்மகனைக் கொடுத்தார். அவரே சாமுவேல். அந்தக் குழந்தையை அவள் தேவனுடைய ஊழியத்திற்கே அர்ப்பணிக்க விரும்பினாள். தன் விருப்பத்தை எல்க்கானாவிடம் தெரிவித்து, அவனது சம்மதத்தைக் கேட்ட போது, ''உனக்கு நலமாய் தோன்றுகிறதைச் செய்(வ.23) என்று தான் பதிலுரைத்தான்.
அவனுக்கென சொந்த விருப்பு, வெறுப்பு இருந்தாலும், அன்னாளின் விருப்பத்துக்கு சம்மதமளித்தான். சாமுவேல், கர்த்தருடைய
ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்டான்.
சாமுவேலை கர்த்தருடைய ஊழியத்திற்கு அர்ப்பணித்ததில், அன்னாளுக்கு நன்மதிப்பு இருப்பது போல, எல்க்கானாவுக்கும்
அதற்கு இணையான நன்மதிப்பு உண்டு. இவ்வாறு குடும்பத்தில் பல பிரச்னைகள் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல்
கர்த்தருடைய கட்டளைகளை அவன் பின்பற்றினான். தன் மனைவிக்கு நல்ல கணவனாக நடந்து கொண்டான்.
எல்க்கானாவைப் போல், உங்கள் துணைவியின் கருத்திற்கு மதிப்பளித்து, அவரை நல்ல முறையில் நீங்களும் நடத்துவீர்கள் தானே!