
வேல்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஏழை விதவையான அவனுடைய தாய் பெய்து கொண்டிருக்கும் மழையை பொருட்படுத்தாமல், 7 கி.மீ., தூரம் நடந்தே நகரத்திற்குச் சென்று ஒரு மருத்துவரைச் சந்தித்தாள். தன் மகனுக்கு சிகிச்சை அளிக்க தன்னுடன் வருமாறு அழைத்தாள். மழை பெய்யும் இந்நேரத்தில் வழியில் ஏற்படும் சிரமத்தை நினைத்து மருத்துவர் தயங்கினார். இருந்தாலும் தாயின் வாட்டம் கண்டு, உதவி செய்ய முன்வந்து அவளுடன் புறப்பட்டார். சிறுவனை நோயில் இருந்து காப்பாற்றி பிழைக்கச் செய்தார்.
அநேக வருடங்கள் கழித்து அந்த சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான். படிப்படியாக வாழ்வில் பெரிய மனிதராக உயர்ந்தான். ஒருநாள், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நபர் தான் லாயிட் ஜார்ஜ். அவருக்கு உதவிய மருத்துவர் பின்னாளில், ''நான் அச்சிறுவனை காப்பாற்றிய போது வருங்காலத்தில் அவர் இங்கிலாந்தின் பிரதமராகவோ, ஒப்பற்ற தலைவராகவோ வருவார் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆகவே, இளைய சமுதாயத்தை அற்பமாக ஒரு போதும் எண்ண வேண்டாம்'' என்று குறிப்பிட்டார்.
சிறுவர்களைக் குறித்து இயேசு கூறியதாவது.
* ''இந்த சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடி எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்தில் என் பரமபிதாவின் சமூகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார்(மத்.18:10).
* பெரிய ஆலமரத்தின் ஆரம்பம் சிறிய விதையில் தான் அடங்கியிருக்கிறது. அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை பண்ணலாம்? (சகரியா 4;10)
* உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளை அற்பமாய் எண்ணப் பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்து கொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1 கொரி. 1;28,29)
* புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக. புசியாதிருக்கிறவனும்
புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக. தேவன் அவனை ஏற்றுக் கொண்டாரே.
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. அவன் நிலைநிறுத்தப்படுவான். தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே(ரோமன் 14:3,4)
இந்த வசனங்கள் மூலம், நாம் எல்லாரையுமே மதிக்கக் கற்றுக்கொள்வோம்.