ADDED : டிச 19, 2022 12:35 PM

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஐஸன்ஹோவர். வெள்ளை மாளிகையில் வசித்து வந்த இவர், தனது அறையில் கண்ணாடி பீரோவுக்குள் துடைப்பம் ஒன்றை வைத்திருந்தார். இவரை சந்திக்க வருபவர்கள் அனைவரும், பீரோவுக்குள் இருந்த துடைப்பத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால் இவரிடம் இதைப்பற்றி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. ஆனால் இதை கவனித்துவிட்டார் ஜனாதிபதி.
''என்னடா... பீரோவுக்குள் துடைப்பத்தை வைத்திருக்கிறாரே... இவருக்கு மனநலம் சரியில்லையா? என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு பின் சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. அதாவது நான் ஜனாதிபதியானதும் எனக்கு வந்த பரிசுகளில் ஒன்றுதான் இது. கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அதில், 'அரசியலில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய, இந்த துடைப்பம் உங்களுக்கு பயன்படும்' என்று எழுதப்பட்டிருந்தது. அவர் சொல்லிய விதம்தான் தவறே தவிர, சொன்ன விஷயம் நிஜம்தானே... இதை நான் எப்போதும் மறக்கக்கூடாது என்பதற்காகவே இப்படி வைத்துள்ளேன்'' என்றார்.
