/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
நீங்க திருந்துங்க! அவங்களும் திருந்துவாங்க!
/
நீங்க திருந்துங்க! அவங்களும் திருந்துவாங்க!
ADDED : மார் 04, 2013 01:00 PM
ஒரு போதகரின் வீட்டிற்கு நாய் ஒன்று வந்தது. அந்த நாய்க்கு உணவளித்து பாதுகாத்தார் போதகர். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களிடமும் அன்பாக பழகியது அந்தநாய்.
ஒருநாள், பேப்பரில் காணாமல் போன தன் நாயைப் பற்றி விளம்பரம் செய்திருந்தார் ஒருவர். அதில், கருப்பு நிறமுடைய அந்த நாயின் வாலில் மட்டும் நான்கே நான்கு வெள்ளை முடிகள் இருக்கும் என்று அடையாளம் காட்டியிருந்தார். இதைப்படித்த போதகர், நாயின் சொந்தக்காரர், அதை எப்படியோ தேடிப்பிடித்து விடுவார் எனக்கருதி, வெள்ளை முடிகளை மட்டும் கத்தரித்து விடும்படி பிள்ளைகளிடம் சொன்னார்.
'நாயை உரியவரிடம் சேர்க்க வேண்டும், அடுத்தவர் பொருள் நமக்கு ஆகாது' என்று பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லியிருந்தால், அவர்களும் அதன்படி நடந்திருப்பார்கள். இவரோ தவறான நடைமுறையைப் போதித்தார். ஒருவழியாக, நாயின் சொந்தக்காரர் நாயைக் கண்டுபிடித்து, திருப்பித் தருமாறு கேட்டார். 'நாய்க்கு வெள்ளை முடிகள் இருப்பதாக விளம்பரத்தில் உள்ளது. இந்த நாய்க்கோ அப்படி இல்லை. எனவே, இது உங்கள் நாய் இல்லை' என அடித்துச் சொல்லிவிட்டார் போதகர். சொந்தக்காரர் வருத்தத்துடன் போய் விட்டார்.
இதன்பிறகு, அந்த பிள்ளைகள் தந்தையின் போதனைப்படி, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருட ஆரம்பித்தனர். கர்த்தரின் ஆசிர்வாதம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கர்த்தர் சொன்னவைக்கு மாறாக நடந்து, தன் தந்தைக்கு கெட்ட பெயரை உண்டாக்கினர். பலமுறை ஜெயில் சென்றதால், போதகரை யாரும் மதிக்கவில்லை.
பைபிளில், 'பிதாக்களே! நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமலும், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக!' என்ற வசனம் இருக்கிறது. இதைப் பின்பற்றாவிட்டால், குழந்தைகளைக் கெடுத்த பொறுப்பு பெற்றோரையே சேரும்.