ADDED : மார் 17, 2013 05:55 PM
கூட்டத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவளது அப்பா, இயேசுகிறிஸ்து, தனது வாழ்க்கையில் செய்த அற்புதங்கள் பற்றி சாட்சி சொல்லிக் கொண்டிருந்தார். குடிகாரனாக இருந்த தன்னை ஆண்டவர் எப்படி விடுவித்தார் என்பது பற்றி விளக்கினார். சிறுமியின் அருகில் நின்ற ஒருவர் இதைக் கேட்டு சிரித்தார். ''இது ஒரு மதவாதியின் முட்டாள்தனமான பேச்சு,'' என்றார்.
திடீரென உரத்த குரலில், சாட்சி சொல்லிக் கொண்டிருந் தவரை நோக்கி, ''ஏய்வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார்! நீ ஏதோ கனவில் கண்டதை உளறிக் கொண்டிருக்கிறாய்,'' என்று கத்தினார்.
அந்த நேரத்தில் அவரது கோட்டைப் பிடித்து யாரோ இழுத்தனர்.
திரும்பிப் பார்த்தால் ஒரு சிறுமி கோட்டை இழுப்பது தெரிந்தது.
அவள் அவரிடம்,''ஐயா! நீங்கள் கீழே அமரச்சொன்ன நபர் யார் தெரியுமா? எனது தந்தை. அவர் ஏதோ கனவு கண்டு உளறுவதாகச் சொன்னீர்கள். என் அப்பாவின் பழைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இப்படி பேசமாட்டீர்கள். முன்பு அவர் நன்றாகக் குடித்து விட்டு, இரவு வேளையில் தாமதமாக வருவார். என் அம்மாவைக் காரணமே இல்லாமல் அடித்து துன்புறுத்துவார். இரவெல்லாம் அம்மா அழுது கொண்டே இருப்பார்கள். எனக்கு நல்ல உடை கிடையாது. பள்ளிக்கு அணிந்து செல்ல 'ஷு' இருக்காது. சிறிய பொருட்களைக் கூட விற்று, குடித்து தீர்த்து விடுவார்.
ஆனால், இப்போது நான் அணிந்திருக்கும் உடையைப் பாருங்கள்! இப்போது அப்பா ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். அதோ! சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருக்கிறார் களே ஒரு பெண்மணி! அவர்கள் தான் என் அம்மா! அம்மா இப்போது அழுவதே இல்லை. தேவனைத் துதித்துப் பாடுகிறார்கள். இயேசு என் அப்பாவை மாற்றிவிட்டார். எங்கள் வீட்டையே மாற்றி விட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். உங்கள் பார்வையில் என் அப்பா கனவு காண்பவரைப் போல் தோன்றலாம்.
ஒருவேளை, அதுவே நிஜமானாலும் கூட, அந்தக் கனவிலிருந்து அவரை எழுப்ப வேண்டாம்,'' என்றாள்.
குற்றம் சாட்டியவர் மவுனமாகி விட்டார்.