/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
அன்பினும் உயர்ந்தது எதுவுமில்லை!
/
அன்பினும் உயர்ந்தது எதுவுமில்லை!
ADDED : மார் 25, 2013 03:31 PM

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கனின் அரசியல் எதிரி ஸ்டான்ஸ்டன். லிங்கனை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சிப்பார். பத்திரிகைகள் இதை பெரிதுபடுத்தும். லிங்கனோ, அதைக் கண்டு கொள்வதே இல்லை. ஒருநாள், அவர் ஸ்டான்ஸ்டனை அழைத்தார்.
''உங்கள் விமர்சனங்கள் என் ஆட்சியை வழிநடத்த மிகவும் உதவின. என்னை நீங்கள் 'ஆதி மனிதக்குரங்கு', 'கீழ்த்தரமானவன்', 'கிறுக்கன்' என்றெல்லாம் விமர்சித்து இருந்தீர்கள். எல்லாமே உண்மை தான். இப்போது நான் போர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதிபுத்திசாலியான நீங்கள் ராணுவ அமைச்சராக இருந்து போர் வீரர்களை வழி நடத்த வேண்டும்,''என்றார்.
அந்த நபருக்கு தலை சுற்றி விட்டது.
விமர்சனங்களை தாங்கும் பக்குவத்துடன், தன்னையே அமைச்சராகவும் நியமித்த லிங்கனின் அன்பை எண்ணி வியந்தார். அமைச்சரவையிலும் பொறுப்பேற்றார்.
லிங்கன் இறந்ததும் தேம்பித் தேம்பி அழுத அந்த அமைச்சர், ''உலகம் தோன்றிய நாளில் இருந்து லிங்கனைப் போல் அருமையான, அன்பான ஆட்சியாளர் இருந்ததில்லை,'' என்றார்.
எதிரிகளைக் கூட மாற்றும் சக்தி அன்புக்கு இருக்கிறது. இயேசுவும், இதைத்தான் மக்களிடம் எதிர்பார்த்தார். எதிரிகளையும் மன்னித்து, அவர்களையும் மனம் திருந்தச் செய்யும் சூழ்நிலை இவ்வுலகில் ஏற்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது.
''இவர்கள் செய்யும் தவறு இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே, இவர்களை மன்னியும்,'' என்று தன்னைச் சிலுவையில் அறைந்து கொடுமை செய்தவர்களுக்காக அவர் ஜெபித்தார். நாமும் முயற்சிப்போமா!