ADDED : செப் 17, 2010 10:28 PM

மரணம் நிச்சயம் வந்து தானே தீரும்! நித்திய ஜீவனை (மரணமில்லா பெருவாழ்வு) பெறுவது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்!
சாதனை வீரர் மகா அலெக்சாண்டருக்கு உலகத்தையே ஆள வேண்டும்என்பது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால்,33 வயதிலேயே உயிரிழந்தார். அவரது படையுடன் பல நாடுகளுக்கும் சென்றார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீதோஷ்ணம்...ஒவ்வொரு விதமான உணவு, தண்ணீர் என மாறி மாறி பயன்படுத்த வேண்டிய நிலை...முடிவு..மனஉறுதியை உடல்உறுதி குலைத்து விட்டது. கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்டார். மருந்தால் அது குணமாகவில்லை. மரித்துவிடுவோம் என்ற நிலையில், அளவுக்கதிகமாக வருத்தப்பட்டார். உலகத்தை ஆள வந்தவர் ராஜாதி ராஜரான கர்த்தர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. மனிதனுக்கு இறக்கும் நேரத்தில் தான் ஞானோதயம் வரும். அவர் தன் தளபதியை அழைத்தார்.
''தளபதி அவர்களே! நான் இறந்ததும், என் சவப்பெட்டிக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி வையுங்கள். நான் வரும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை. இத்தனை ராஜ்யங்களை ஜெயித்தும், ஏராளமான செல்வம் இருந்தும் போகும் போதும் ஒன்றும் கொண்டு போகவில்லை,'' என்று மனக்கஷ்டத்துடன் கூறினார்.
மிகப்பெரிய சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா!
கிரேக்கநாட்டின் பெரும் பணக்காரரான ஒனாசிஸ் பல்லாண்டுகள் வாழ்ந்தாலும் கூட மரணத்தைக் கண்டு பயந்தார். நோயின் தாக்கம் அதிகமானது. டாக்டர்கள் 'இனி எங்களால் ஏதும் செய்ய இயலாது' என்று சொல்லிவிட்டார்கள். பணம் இருந்து என்ன பயன்! காலம் முடிந்து விட்டதே! ஆனாலும், <உயிர் மீதான ஆசை விடவில்லை. வேறு வழியின்றி தன் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்தார்.''என் உடலைப் புதைத்து விடாதீர்கள். சீனாவுக்கு அனுப்பி பனிக்கட்டியில் வைத்து பாதுகாத்து வாருங்கள். எதிர்காலத்தில் மரித்தவர்களை எழுப்பும் மருத்துவம் வரலாம். அதைப் பயன்படுத்தி என்னை எழுப்புங்கள்,'' என்றாராம். இந்த உலகில் யாருமே மரணத்துக்கு தயாராக இல்லை. மறுஉலக வாழ்க்கைக்கு நம்மை எந்நிலையிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை சிலுவையிலே ஒப்புவித்து, பிதாவின் கைகளிலே தம்முடைய ஆவியைக் கொடுத்து நித்திய ஜீவனை நமக்கு அருளிச் செய்ய சித்தமானவராய் இருக்கிறார் என்பதை நாமெல்லாம் உணர வேண்டும்.