மியான்மர் தேசம் சில காலத்திற்கு முன்பு பர்மா என அழைக்கப்பட்டது. இந்த நாட்டிற்கு டாக்டர் ஜட்சன் என்பவர் ஊழியம் செய்து வந்தார். இரவு பகலாக கஷ்டப்பட்டு பர்மிய மொழியில் பைபிளை மொழி பெயர்த்தார். அந்த நாட்டில் பிற மத நூல்களை எழுதுவது குற்றம் என சட்டம் இருந்தது. எனவே, அவர் எழுதிய கையெழுத்துப் பிரதியை அச்சிடுவதற்குள் ஜட்சனைக் கைது செய்து சிறையில் அடைத்தது அரசாங்கம். ஜட்சனின் மனைவி வீட்டில் இருந்தார். தனது கணவர் பர்மிய மொழியில் எழுதியிருந்த நூலை அதிகாரிகள் கைப்பற்றி எரித்து விடுவார்களோ என பயந்தார். அதை எழுத அவர் பட்டபாடு அந்த அம்மையாருக்குத் தெரியும். தனது கணவரின் நீண்ட நாள் உழைப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த கையெழுத்து பிரதியை ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்தார். ஒருநாள், ஜட்சன் தனது மனைவிக்கு அந்த பிரதியை எப்படியாவது சிறைக்குள் அனுப்பி வைக்கும்படியும், அதைப் படிக்க தான் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் அனுப்பினார். ஜட்சனின் மனைவி, அதை ஒரு தலையணைக்குள் வைத்து தைத்து, தலையணையை அவருக்கு கொடுப்பது போல கொடுத்து விட்டார். அந்த தலையணை ஜட்சனிடம் இருந்தது. அந்த சமயத்தில், அதிகாரிகள் அவரை வேறு சிறைக்கு மாற்றினர். தலையணையுடன் புறப்பட்ட ஜட்சனை ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
''நீங்கள் மாறவிருக்கும் சிறைக்குள் தலையணையை அனுமதிக்கமாட்டோம்,'' என்று சொல்லி, அதை சிறைக்கு வெளியே எறிந்து விட்டார். அதை பலர் மிதித்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அது கிழிந்து விட்டது. அந்த வழியாக ஒரு இளைஞர் வந்தார். அந்த தலையணையில் ஏதோ தாள்கள் நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். பிரித்துப் பார்த்தார். தனது பர்மிய மொழியில் பைபிள் இருந்ததைப் படித்து ஆனந்தமானார். அரசுக்குத் தெரியாமல் அதை அச்சடித்தார். அதற்கு பெரும் செலவானது. அதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை. மக்களுக்கு அது விநியோகிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் பர்மிய மொழியில் பைபிள் அச்சடிக்கப்படுகிறது. எந்த நிலையிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இந்த சம்பவத்தில் இருந்து உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதப்பட்ட வேதம் எந்த மொழியில் இருந்தாலும், அதைப் படிக்காமல் இருந்தால் பயனில்லாமல் போய்விடுமே! ஒரு வசனத்தைக் கேளுங்கள். ''உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால் என் கண்களிலிருந்து நீர் தாரைகள் ஓடுகிறது,''. ஆம்...கஷ்டப்பட்டு எழுதப்பட்ட பைபிளை தவறாமல் வாசியுங்கள்.