ADDED : ஜூலை 09, 2010 08:38 PM
மனிதருக்காய் காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஆனால், கர்த்தருக்காக காத்திருக்கிறவர்களோ பூரண ஆசிர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்கிறார்கள். கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயமாகவே அவர் உங்கள் கூப்பிடுதலைக் கேட்டு இரக்கம் செய்வார் (சங்:40:1)
ஒரு வாலிபப்பெண்ணின் சோக சரித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. அவள் மிகவும் விரும்பிய வாலிபன் அவளிடம், ""நீ எனக்காகக் காத்திரு. நான் அமெரிக்கா சென்று வந்தவுடன் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்,'' என வாக்களித்துச் சென்றான். அவளும் அதை உண்மை என நம்பி பல ஆண்டுகள் அவனுக்காக மிகுந்த பொறுமையுடன் காத்திருந்தாள். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். எப்படி தெரியுமா? அங்கிருந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டு இரண்டு பிள்ளைகளோடு வந்து சேர்ந்தான். இங்கே காத்திருந்தவளுடைய இருதயம் உடைந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியாகி விட்டாள். எவ்வளவு பெரிய கொடுமை பார்த்தீர்களா? தேவனுடைய சித்தத்திற்கும், கர்த்தருடைய வேளைக்கும் காத்திராமல் தங்கள் சுயவிருப்பம் போல மனிதரை நம்பி காத்திருக்கும்போது தான் இப்படிப்பட்ட வேதனையான முடிவுகள் தான் நிகழ்கின்றன. இலவுகாத்த கிளிபோல பயனில்லாமல் போய்விடுகிறது. மனிதரை மனிதர் நம்புவதால் லாபம் ஏதுமில்லை. ஆண்டவரை நம்புபவர்களே கைவிடப்படமாட்டார்கள்.
இதுபற்றி தாவீது ராஜா சொல்கிறார். ""கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே! நீங்களெல்லாம் திட மனதாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்,' ' என்று. ஆம்...கர்த்தரின் வருகையை திடநம்பிக்கையுடன் எதிர் நோக்குவோம்.
பைபிள் பொன்மொழிகள்
* உங்களிடம் இருக்கிற துணிவைக் கைவிடாதீர்கள்.
* இருமனத்தோரே! உங்கள் உள்ளங்களை தூய்மைப் படுத்துங்கள்.
* உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்.
* கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை.
* உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் பேசுங்கள்.
* "பணம் பணம்' என அலையாதீர்
பணத்துக்காக எதையும் செய்யும் நிலையில் இன்று உலகம் போய்க் கொண்டிருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை என்ற நிலைமை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு, தனிமனித ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. உன் இறுதிக்காலத்தைச் சிந்தித்துப் பார். உன்னோடு வரப்போவது எதுவுமே கிடையாது. உன் சந்ததிக்காக சேர்க்கிறாய் என்றால், அவர்களுடனும் அது வராது. ""பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்து திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள் (ம. 6:19) என்ற வசனத்தை பைபிள் உதிர்க்கிறது. இதை மனதில் கொண்டு பணம் தேடும் பணி மட்டுமின்றி, அவ்வாறு கிடைக்கும் பணத்தை பிறருக்கு உதவுவதிலும், தேவசபைக்கு செலவிடுவதிலும் அக்கறை காட்டுங்கள்.