ADDED : அக் 29, 2012 11:46 AM

அனைத்து ஆன்மாக்கள் தினம் என்னும் கல்லறை தினம், நவம்பர் 2ல் அனுசரிக்கப்படுகிறது.
பாவிகள், பரிசுத்தவான்கள் என்றில்லாமல், இறந்த அனைத்து கிறிஸ்தவர்களையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி வைத்து மரியாதை செலுத்தும் தினமாக பழக்கத்தில் உள்ளது.
முன்னதாக, நவ.,1ல் சகல பரிசுத்தவான்களின் தினம்''(ஆல் செயின்ட்ஸ் டே') அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான 'பைபிள்' மூலம், கல்லறை தினத்துக்கு வித்திட்டவரே 'கடவுள்' ஆவார் என்பதே உண்மை. கல்லறை பற்றி பைபிள் பழைய, புதிய ஏற்பாடுகளில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
வார்த்தையாகவும், ஆவியானவராகவும் செயல்பட்ட கடவுள் ஆதிமனிதனான ஆதாமை மண்ணினால் படைத்து, அவனது விலா எலும்பிலிருந்து மனைவியான ஏவாளையும் படைத்தார். அவர்கள் செய்த பாவத்தினிமித்தம், கடவுள், அவர்களை நோக்கி: ''பூமியின் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட படியால் மண்ணுக்கே திரும்புவாய்'' என்றார்.
அன்றிலிருந்து உண்டான பழக்கமே, இன்று வரை உலகில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மரித்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆதாமிலிருந்து தொன்று தொட்டு மரித்தவர்களை அடக்கம் செய்யும் பழக்கம் இருந்து வந்தது போலவே, கிறிஸ்துவும் மரித்த பின் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், இயேசுவின் மூன்றாம் உயிர்த்தெழுந்த நிகழ்வினை போலவே, அவரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ள கிறிஸ்தவர்களும் உயிர்த்தெழுதலில் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே இறந்தோரை நித்தியமாக அழிந்து விட்டனர் எனக் கருதாமல், 'நல்லடக்கம்' என புதைக்கின்றனர்.
''நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றும் மரியாமலும் இருப்பான்'' என இயேசு கூறிய வார்த்தை கிறிஸ்தவர்களின் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. மேலும் ''கிறிஸ்து ஜீவன், சாவு ஆதாயம்'' என்ற பைபிள் வார்த்தையும், இறப்புக்காக வருத்தம் இருப்பினும் மிகவும் ஆறுதலாக கொண்டுள்ளனர்.
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின், அவரை பின்பற்றிய சீடர்களுக்கு 40 நாட்கள் மட்டும் காட்சி அளித்து பின் வானத்துக்கு ஏறிப்போனார் என பைபிள் கூறுகிறது. அதன் அடிப்படையில் இன்று வரை, துறவறம் கொண்டவர்களை பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்பட்டபடியால், அவர்களுக்கென நவ.,1 பரிசுத்தவான்களின் தினம்'ஆல் செயின்ட்ஸ் டே' என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.
முதன்முறையாக போப் நான்காவது போனிபேஸ், கி.பி.,609 மே 13ஐ சகல பரிசுத்தவான்களின் தினமாக மட்டும் அனுசரிக்க முடிவு செய்தார். அதன்படி தொடர்ந்து வழக்கமாக இருந்து வந்தது. கி.பி., 731ல், போப் மூன்றாம் கிரிகொரி நவ.,1ஐ அனுசரிக்க அடித்தளம் அமைத்தார். போப் நான்காவது கிரிகொரி, கி.பி.,837-நவ.,1, 'ஆல் ஹாலோஸ்-ஹாலோவமஸ்' என சகல பரிசுத்தவான்களின் தினமாக அனுசரிக்க கட்டளையிட்டார்.
பரிசுத்தவான்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கி.பி.,998லிருந்து பிரான்ஸ் தேசத்தில், நவ.,2ஐ பொதுவான கல்லறை தினமாக அனுசரிக்க முடிவு செய்த பழக்கம் இன்றுவரை அனுசரிக்கப்படுகிறது.
சி. ஆரோக்கியராஜ்