ADDED : அக் 07, 2012 05:42 PM

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தைப் பற்றி அந்நாட்டு மக்கள் மிகவும் பெருமை கொண்டிருந்தனர். ஒருமுறை பூமியதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து கட்டடங்கள் சரிய ஆரம்பித்தன. பல இடங்களில் தீப்பிடித்தன. வீடுகள் தீக்கிரையாயின. ஒரே நாளில், அந்த நகரம் தன் மகிமையை இழந்தது.
ஒரு தேவஊழியர் இதுபற்றி கூறும் போது,''மனிதன் தேவனுடைய வல்லமையை ஒருபோதும் மேற்கொள்ளவே முடியாது. இந்தப் பெரிய பட்டணத்தை வளர்ச்சியடையச் செய்ய பலநூறு ஆண்டுகளாயின. ஜனங்கள் அந்த பட்டணத்தைப் பற்றி மிகவும் பெருமை பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், கர்த்தரோ ஒரு சிறிய பூமியதிர்ச்சியின் மூலமாய் அவைகளையெல்லாம் நொறுங்கிக் கீழே விழும்படிச் செய்தார். மனிதனே! நீ ஒருபோதும் தேவனை விட பெரியவனல்ல. விஞ்ஞானிகளே நீங்கள் ஒருபோதும் கர்த்தரை விட வல்லமையுள்ளவர்கள் அல்ல, கர்த்தரே சர்வ வல்லமை உள்ளவர்,'' என்றார்.
பைபிளில் ஒரு சம்பவம் வருகிறது.
''ஆதியிலே ஜனங்கள் தங்களுடைய வல்லமையை வெளிப்படுத்தவும், பேர்புகழ் உண்டாகவும், வானளாவும் சிகரமுள்ள பாபேல் கோபுரத்தைக் கட்ட முயற்சித்தார்கள். தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று எண்ணினார்கள். அந்தோ பரிதாபம்! கர்த்தருடைய வல்லமை குறுக்கிட்டது. கர்த்தர் அவர்களுடைய பாஷைகளை தாறுமாறாக்கினார். ஆகவே, அவர்கள் பூமியெங்கும் சிதறிப்போனார் கள்''(ஆதி11:1,9) விஞ்ஞான வளர்ச்சி இறைவனின் ஆளுகைக்கு அடிமைபட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.