பத்துவிதமான மனிதர்கள் தங்களின் எதிர்பார்ப்பை ஆண்டவரிடம் தெரிவித்தனர்.
முதல் மனிதன்,“கோடி கோடியாக பணம் வேண்டும்” என்றான்.
இரண்டாவது மனிதன், “அரசியலில் ஈடுபட்டு பெரிய பதவியை அடைய வேண்டும்” என்றான்
மூன்றாவது மனிதன், “ நடிகராக வேண்டும்” என கூறினான்.
நான்காவதாக நின்ற ஒருபெண், “ உலகமே பாராட்டும் அழகியாக வேண்டும்'' என சொன்னாள்.
இப்படி ஒன்பது பேர் ஒவ்வொன்றாக கேட்க பத்தாவதாக நின்றவனோ ''நிம்மதியுடன் வாழ விரும்புகிறேன்'' என்றான்.
இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்ததோடு, “நிம்மதியாக வாழத் தானே நாங்களும் கேட்கிறோம்” என்றனர்.
''நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன். போகலாம்.” என சொன்ன ஆண்டவர் பத்தாவது நபரிடம், ''சற்று நேரத்தில் வருகிறேன்'' என சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
'அவனுக்கு ஆண்டவர் என்ன தரப் போகிறார்' என்பதை அறிய ஒன்பது பேரும் துடித்தனர்.
எதுவும் கேட்டுப் பெறாத அவன் மீது பொறாமை உண்டானதால், மற்றவர்களின் நிம்மதி குலைந்தது. ஆனால் பத்தாவது மனிதனோ நிம்மதியாக காத்திருந்தான்.
'பத்தாவது மனிதனா...இல்லை பத்தாது என்கிற மனிதனா..?' என நீங்கள் முடிவு செய்யுங்கள்.