/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
"மிமீட்ஸ்'.... அர்த்தம் தெரியுமா?
/
"மிமீட்ஸ்'.... அர்த்தம் தெரியுமா?
ADDED : செப் 02, 2012 12:34 PM

கிரேக்க மொழி பைபிளிலுள்ள 'மிமீட்ஸ்' என்ற வார்த்தையில் இருந்து தோன்றிய சொல்லே'மிமிக்ரி'. ஒருவர் பேசுவது அல்லது நடிப்பது போல் அப்படியே அச்சுப்பிறழாமல் பாவனை செய்வதையே 'மிமிக்ரி' என்கிறோம்.
தமிழ் பைபிளில், ''நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல் தேவனைப் பின்பற்றுகிறவராயிருங்கள் (எபே5:1) என்ற வசனத்தில், 'பின்பற்றுகிறவராயிருங்கள்' என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியாக்கத்தில் 'மிமீட்ஸ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூலவார்த்தை மருவி ஆங்கிலத்தில் 'மிமிக்' என்ற வழக்குச்சொல்லாக உள்ளது.
'ஆகையால் என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்கிறேன்'' (1கொரி.4:16) என்ற வசனத்திலும், ''நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள் (1கொரி.11:1) என்ற வசனத்திலும்,
இன்னும் சிலவற்றிலும் 'மிமீட்ஸ்' என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அம்மாவையும் அப்பாவையும் மிகவும் பிரியமாக நேசித்து கீழ்ப்படிந்து நடக்கிற பிள்ளைகள் பெற்றோரை அப்படியே பின்பற்றுவதைக் கண்டிருக்கிறோம். அதே போல 'கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்' என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். மேலும், ''நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுவராயிருங்கள்,'' என்று தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு நிச்சயத்தோடு சொல்கிறார்.
ஒரு ஊழியக்காரரின் தகுதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறதை நாம் விளங்கிக் கொள்ளுகிறோம். 'என்னைப் பின்பற்றுங்கள்' என்று சொல்லுகிற தைரியத்தை அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறது போல, ஒவ்வொரு ஊழியக்காரரும் இருக்க வேண்டும் என்பதைத்தான் தேவன் தமது ஊழியக்காரர்களிடம் எதிர்பார்க்கிறார்.
'என்னைப் பின்பற்றி வா' என்று இயேசு தமது சீடர்களையும் மற்றவர்களையும் அழைத்தபோதும், எழுத்தின்படி அவரைப் பின்பற்றுவதற்கு மாத்திரமல்ல. அவருடைய சுபாவத்தையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் உள்ளடக்கித்தான் அவ்வாறு
(மிமீட்ஸ்) சொன்னார். ஆகவே, இந்த வழிமுறையில் நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாயிருப்போம்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.
* எனக்கு வறுமையையோ செல்வப்பெருக்கையோ தர வேண்டாம். எனக்கு அன்றாடத் தேவையான உணவை மட்டும் ஊட்டும்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
-பைபிள் பொன்மொழிகள்