ADDED : ஆக 27, 2012 10:13 AM
'கர்த்தர் நம்மைக் காக்கிறவர்' என்ற வசனம் பைபிளில் 23, 91,121ம் சங்கீதத்தில் மாறி மாறி வருகிறது. மூன்று முறை அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்டவர் படைத்த பறவைகள், தங்கள் குஞ்சுகளை பருந்து உள்ளிட்ட பகைவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு மூர்க்கமாகப் போரிடுகின்றன. பருந்தை விட வலுவில் பலமடங்கு குறைந்த கோழி கூட, தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தன்னால் முடிந்த உயரத்துக்குப் பறந்து பருந்தை ஆக்ரோஷமாக விரட்டுகிறது.
ஒரு கூட்டில் குஞ்சுகளுடன் சுகமாக வாழ்ந்தது கோழி. ஒருநாள், அந்த மரக்கூட்டில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து விட்டது. குஞ்சுகள் கதறின. சுதாரித்துக் கொண்ட கோழி தன் இறக்கையை அகலமாக விரித்து குஞ்சுகளை அதற்குள் பதுங்கச்செய்தது. அவற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது. தீ கோழியை நெருங்கியது. அது பொசுபொசுவென கருகிக் கதறியது. இதற்குள் கோழியின் உரிமையாளர் அதனைக் கவனித்து விட நீரூற்றி, தீயை அணைத்து விட்டார். ஆனால், கோழியைக் காப்பாற்ற முடியவில்லை. கரிந்து கிடந்த கோழியை ஒரு குச்சியால் தள்ளிய போது, இறகுக்குள் பாதுகாக்கப்பட்ட குஞ்சுகள் வெளியே வந்தன. கோழி எப்படி தன் குஞ்சுகளைப் பாதுகாத்ததோ, அதுபோல் கர்த்தர் நம் கஷ்டகாலத்தில் நம்மைப் பாதுகாக்கிறார். இப்போது சொல்லுங்கள், 'கர்த்தர் நம்மைக் காக்கிறவர்' என்ற வசனம் நூற்றுக்கு நூறு உண்மை தானே!