
மலைப்பகுதிகளில் உள்ள ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, மூணாறு என்றெல்லாம் சுற்றுலா சென்று வந்திருப்பீர்கள்.
அங்கெல்லாம் ஆழமான பள்ளத்தாக்குள் உண்டு. உயரமான குன்றுகளில் இருந்து எட்டிப்பார்த்தால், தலையே சுற்றுவது போல் தோன்றும். வாழ்வை வெறுத்தவர்களும், அஜாக்கிரதையாக இருப்பவர்களும் இதனுள் விழுந்து தங்கள் உயிரை விடுகிறார்கள். எனவே, இந்தப் பகுதிகளைக் குறித்து எச்சரிக்கை பலகை வைத்திருப்பார்கள்.
இந்தப் பாறைகளில் இருந்து தவறி விழுவதை விட கொடியது தான், பாவம் செய்து பாதாளத்தில் விழுவதாகும். வாழ்க்கையில் பாவம் செய்ய பல சந்தர்ப்பங்கள் வருகிறது. இன்றைய நவீன உலகத்தில் தொலைதொடர்பு, இன்டர்நெட் போன்ற சிறந்த வசதிகள் கூட தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பேசுவதற்கு பயன்பட்ட தொலைபேசி, இன்று ஆபாசங்களைப் படம் பிடிக்கும் தொல்லை பேசியாக மாறிவிட்டது. குறிப்பாக, பெண்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இச்சைகளும், விபச்சார ஆவிகளும் ஒரு மனுஷனை சாத்தானுக்கு அடிமையாகச் செய்கின்றன. உலகத்தின் இன்பங்களும், ஆசாபாசங்களும் ஒரு மனுஷனை தவறி விழச்செய்கின்றன.ஆனால், கர்த்தரிடத்தில் கையேந்தி ஜெபித்தால் இப்படிப்பட்ட நிலையே எழாது. அவரது கரங்கள் நம்மை பாவங்களுக்குள் வீழாதபடி பாதுகாக்கும். தேவனுடைய பலத்த கரம் நம்மைத் தாங்கி நிலைநிறுத்த வல்லமையுள்ளது. நம் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தேவனுடைய கிருபை நம்மைத் தாங்கும்.
'வழுவாதபடி காக்கவும்' என்ற யூதா 1:24 வசனத்தைச் சொல்லிகர்த்தரை ஜெபியுங்கள். இந்த எளிய வசனம் நம்மைப் பாவங்களுக்குள் விழவிடாமல் பாதுகாக்கும்.