/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
ஆண்டவரிடம் கேட்டும் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
/
ஆண்டவரிடம் கேட்டும் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
ADDED : டிச 15, 2015 11:32 AM

'கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப் படும்' என்கிறார் இயேசுநாதர். ஆனால், சில சமயங்களில் ஆண்டவரிடம், ஒருவர் எவ்வளவு தான் ஜெபித்தாலும், பல விஷயங்கள் நிறைவேறாமலேயே போய் விடுகின்றன. இதற்கான காரணம் என்ன? ஒருவர் பரலோகத்திற்கு (சொர்க்கம்) சென்றார். அங்கே அரண்மனை போன்ற வீடுகளை கண்டார். அந்த வீடுகளில் நிறைய அட்டைப்பெட்டிகள் இருந்தன. அவற்றை பல வர்ணத்தாள்களால் சுற்றி ஒட்டி, வண்ண ரிப்பன்களால் அழகாக கட்டி அடுக்கி வைத்திருந்தனர். அந்த பெட்டிகளில் எல்லாம் லேபிள் ஒட்டப்பட்டு, அதில் பலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
சொர்க்கத்துக்கு சென்றவர் அங்கிருந்த தேவதூதரிடம்,''தூதரே! இந்த பெட்டிகளில் எல்லாம் பெயர் எழுதப்பட்டு தயாராக இருந்தும், ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படாமல் இங்கேயே இருக்கிறது?'' எனக் கேட்டார்.
அதற்கு அந்த தூதர்,''அன்பரே! இந்த உலகத்தில் உள்ளவர்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள். எல்லாருக்கும் பலன் கொடுக்கும் விதத்திலேயே இங்கே பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் ஜெபமே செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு இந்த பெட்டிக்குள் இருக்கும் பலன்கள் கிடைக்காமல் இருக்கிறது.
மற்றொரு சாரார் ஜெபம் செய்தாலும் பொது நலம் இல்லாமல் தங்களது இச்சைகளை நிறைவேற்றும் படி தகாத விதமாக ஜெபிக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் பெட்டிகளை அனுப்ப இயலவில்லை,''என்றார்.
உண்மையிலேயே தூதர் சொன்னது போல, ஏராளமானோர் ஆண்டவரை நினைப்பதே இல்லை. நினைப்பவர்களோ சுய நல சிந்தனையுடன் உள்ளனர். பொதுநலம் கருதி எப்போது பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அப்போதுதான் நமது நலன் பற்றி ஆண்டவர் யோசிப்பார்.
எனவே, நம் பிரார்த்தனை நமக்கென ஒரு வீடு, நம் கை நிறைய பணம், நம் பிள்ளைகளுக்கு மட்டும் நல்வாழ்வு என்ற குறுகிய நோக்கத்துடன் இருக்க வேண்டாம்.
இயற்கை சீற்றங்களில் இருந்து உலகம் முழுமைக்கும் பாதுகாப்பு, போர் இல்லாமல், எல்லாரும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழும் வகை, நம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஏன் எதிரிகளுக்கும் கூட நல்வாழ்வு என்று பொதுநலம் கருதி இருக்கட்டும்.
இவ்வாறுசெய்யும் போது, ஆண்டவரிடம் இருந்து நமக்கு பெட்டி பெட்டியாக நல்ல செய்திகள் அனுப்பப்படும். நாம் மகிழ்ச்சியுடன் அவை தரும் பலனை அனுபவிக்க முடியும்.