
ரிப்லி என்பவர் எழுதிய 'நம்பினால் நம்புங்கள்' என்ற புத்தகத்தில் ஒரு அருமையான தகவல் இருக்கிறது. அதில் ஒரு இரும்புத் துண்டு பற்றி அவர் எழுதியுள்ளார். ஒரு சாதாரண இரும்புத்துண்டின் விலை 5 டாலர். அதையே குதிரையின் லாடமாக வடித்ததும் 50 டாலராக விலை உயர்ந்து விடுகிறது. தையல் இயந்திரமாக வடிவமைக்கும் போது அதன் விலை 500 டாலராக கூடி விடுகிறது.
விலை உயர்ந்த ”விஸ் வாட்சின் மெல்லிய ஸ்பிரிங்காக மாற்றியதும் அதன் விலை 5000 டாலராக ஏறிவிடுகிறது. ஆக, 5 டாலர் மதிப்புள்ள ஒரு பொருள், அதை பதனிட்டு வேறு பொருளாக மாற்றும்போது விலை உயர்ந்து கொண்டே போகிறது.
இதுபோல நமக்கும் ஆண்டவர் ஆற்றலைத் தந்துள்ளார். அதை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். ஆண்டவர் பைபிள் மூலமாக நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி வலியுறுத்துகிறார். அதைப் பின்பற்றி திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மையாக அமையும்.
சாதாரண இரும்புத் துண்டு, பொருளாக மாறும்போது அதன் மதிப்பு உயர்வது போல, மனிதர்களும் தங்கள் திறமையை நல்ல முறையில் பயன்படுத்தினால் சமுதாயத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.