ADDED : டிச 10, 2012 11:32 AM

ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தாள். இதை வங்கியில் இரட்டிப்பாகும் வகையில் போட்டு வைக்க கணவர் அறிவுறுத்தினார். அப்போது அவளது தோழி அவளைச் சந்தித்தாள். ''இதை வங்கியில் போட்டால், இரட்டிப்பாக பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமே! என்னிடம் கொடு. மூன்றே ஆண்டில் இரட்டிப்பாக்கித் தருகிறேன்,'' எனச் சொல்லி, மூன்று மாதங்கள் வரை மாதம் பத்து சதவீத வட்டி கொடுத்தாள்.
இவளுக்கோ ஆசை அதிகமானது. தன் கணவருக்குத் தெரியாமல், தன் நகைகளை விற்று, அந்தப் பணத்தையும் தோழியிடம் கொடுத்தாள். அடுத்த மூன்று மாதமும் வட்டி வந்தது. மறுமாதம் வட்டி வரும் தேதியில் தோழியைக் காணவில்லை. வீட்டில் போய் பார்த்தால் கதவு மூடியிருந்தது. விசாரித்ததில், அவள் குடும்பத்துடன் இதே போல பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு, ஊரைக் காலி செய்து விட்டு ஓடியது தெரிய வந்தது. இவள் நொறுங்கிப் போனாள். கணவரிடம் என்ன சொல்வதென தெரியவில்லை. உயிரை மாய்த்துக் கொண்டாள்.
''பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது,'' என்ற பைபிள் வசனத்தை படித்திருந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு தன் இஷ்டத்துக்கு நடந்ததால், அவளுக்கு இந்தக்கதி ஏற்பட்டது.
பேராசை உயிரை வாங்கி விடும். ஏமாற்றுக்காரர்கள் எத்தனையோ புதுப்புது வழிகளை உருவாக்கத்தான் செய்வார்கள். நாம் தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.