ADDED : டிச 10, 2012 11:31 AM
ஒரு ஊழியர் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தேவ ஊழியம் செய்யச் சென்றார். தன்னால் ஆன பிரயத்தனங்களைச் செய்து பார்த்தார். யாருமே தேவனைப் பற்றி கேட்க வரவும் இல்லை. வந்து கேட்ட ஓரிருவரும் அதை ஏற்கவும் இல்லை.
தன் முயற்சி தோல்வி அடைந்ததால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட முடிவெடுத்தார் ஊழியர்.
தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். நண்பரிடமிருந்து பதில் வந்தது.
''நண்பரே! முதலில் நீர் தேவனிடம் உமது பணி சிறக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும்.
உமது வேண்டுதலை கண்ணீருடன் செய்யும். உமது உருக்கமான பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் ஏற்பார்,'' என்று எழுதியிருந்தார். பைபிளில் உள்ள ''நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது,'' என்ற வசனத்தையும் அவர் குறித்திருந்தார்.
அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படித்த அவர், கண்ணீருடன் இயேசுவிடம் வேண்டினார். அவரும் அதை ஏற்றார். பின்னர் சபைக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் கர்த்தரின் கருத்துக்களைக் கேட்டனர். அங்கே சமாதானம் நிலவியது.
உருக்கமாக பிரார்த்திக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும் ஆண்டவர் ஏற்கிறார். அதற்குரிய பலனைத் தருகிறார்.