ADDED : ஜூலை 24, 2013 11:36 AM
தன்னைப் பெரிதுபடுத்திக் கொள்வதற்கென்றே சிலர் இந்த பூமியில் வாழ்கிறார்கள். தன்னைப் பற்றி பலரும் கவுரவமாக கருதவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு சகோதரி மிகுந்த ஆர்வத்துடன் சமூக சேவையில் ஈடுபட்டார். அனாதை விடுதிகளுக்கு தன் தோழிகளுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பேசுவார். குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கேக் செய்து கொண்டு செல்வார். அதை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்போது, புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
ஒருநாள் ஒரு தோழி, ''இந்த கேக்கை வீட்டில்தானே செய்தீர்கள். இதை உங்கள் அம்மா ருசி பார்த்தார்களா?'' எனக்கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, 'இல்லை' என்றார்.
''ஏன் உங்கள் அம்மா வீட்டில் இல்லையா? வெளியூர் போயிருக்கிறார்களா?'' எனக் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு அந்தப்பெண், ''நான் என் அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. அவர் ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்'' என்றார்.
பெற்ற தாயையே கவனிக்க முடியாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உண்மையான மனதுருக்கம் இல்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு சமூக சேவை செய்வதை தேவன் அங்கீகரிக்க மாட்டார். இரட்டை வாழ்க்கை வாழ்வதை தேவன் விரும்பமாட்டார். உங்கள் சொந்த வாழ்க்கையை முதலில் சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு சமூக சேவையில் இறங்குங்கள்.