ADDED : ஆக 13, 2014 12:18 PM

புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவர், மனிதனின் மூளையிலுள்ள பேச்சு நரம்பு மண்டலம், மற்றெல்லா நரம்புகளின் மீதும் முழு ஆதிக்கம் உள்ளதாக இருக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாக்கோபு தன் நிருபத்தில் இது பற்றி இன்னும் தெளிவாக(யாக். 3:5,6) விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சரீரத்தில் நூறு மில்லியன் நரம்பணுக்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு நரம்பணுவும் ஐயாயிரம் செய்தி துணுக்குகளை கொண்டிருக்க கூடியது. நம்முடைய நாவு உண்மையில் நமது சரீரத்தில் இருக்கும் நூறு மில்லியன் நியூரான் மீதும் ஆட்சி செலுத்துவதாக, தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
நான் பலவீனமாய் இருக்கிறேன் என்று நீ கூறுவாயானால், உன் பேச்சு மண்டலத்தில் இருந்து, ''நீ பெலவீனமாய் இருக்க ஆயத்தமாகு'' என்று கட்டளையானது எல்லா நரம்புகளுக்கும் சொல்லுகிறது. உடனே உன் முழு சரீரமும் இளைப்பாற வேண்டும், படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பவை போன்ற உணர்வுள்ளதாகி விடும். அப்போது எந்த வேலையும் செய்வதற்கு பலமற்றவனாய் இருப்பதை நீ உணர்வாய்.
அதுபோல, 'குறிப்பிட்ட நபர் மிகவும் மோசமானவன்' என்று நீ கூறும் போது உன் நரம்பணுக்கள் யாவும், அதை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொள்கிறது. அதன் பின்பு வேறொருவன் அந்த நபரைக் குறித்து அவர் மிக நல்லவர் என்று சொல்வாரேயானால், உன் நரம்புகள் எல்லாம் எரிச்சல் அடைந்து எதிர்த்து நிற்கின்றன. உன் நரம்பணுக்கள் யாவும் உன் நாவுக்கு சிமிட்டும் நேரத்தில் கீழ்ப்படிகிறது. உலகிலேயே மிக அபாயகரமான கூர்முனை, நாவின் நுனிப்பகுதியே என்பதையே இந்த செயல்பாடுகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
''நீங்கள் இன்று உங்களது நாவை எவ்விதம் பயன்படுத்துகிறீர்கள்? மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்''(நீதி 20:21) உங்களது வார்த்தையே உங்களுக்கு ஜீவனையும், மரணத்தையும் கொடுக்கும். ஆகவே, நமக்கும் பிறருக்கும் ஜீவனை கொடுக்கும்
வார்த்தைகளையே பயன்படுத்துவோம். யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறுவதை நிறுத்துவோம். நாவடக்கம் என்பது தன்னடக்கத்தின் ஒரு பகுதி. சபிப்பதை நிறுத்துவோம். நாவாகிய ஆயுதத்தை, பட்டய உறைக்குள்ளே பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்.