ADDED : ஜூலை 29, 2014 04:28 PM

மியான்மர்(பர்மா) தேசத்திற்கு சென்று மிஷனரியாக ஊழியம் செய்தவர் டாக்டர் ஜட்சன். அவர் பல ஆண்டுகள் உழைத்தது, வேத புத்தகத்தை (பைபிள்) பர்மிய மொழியில் மொழிபெயர்த்தார். அதை முடித்த உடனேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த மொழி பெயர்ப்பு பிரதியை அரசுஅதிகாரிகள் கைப்பற்றி எரித்து விடுவார்களோ என்ற பயத்தில், மிஷனெரியின் மனைவி சில காலம் பூமியில் புதைத்து வைத்தார். ஆனால், ஜட்சனுக்கு அந்த கையெழுத்துப் பிரதியை மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டுமென்று ஆசை. எனவே, மனைவிக்கு ரகசியமாய் சொல்லி அனுப்பினார். மனைவி அந்த பிரதியை பஞ்சிலே சுற்றி தலையணை போல் மாற்றி, நீண்ட ஜெபத்திற்குப் பின்பு சிறையில் இருந்த ஜட்சனுக்கு கொடுத்து அனுப்பினார். நீண்ட நாட்கள் அந்த தலையணை ஜட்சனோடு இருந்தது. இரவில் யாரும் பார்க்காத வண்ணம் அவ்வப்போது அதை பிரித்துப் படித்தார். அந்த அளவிற்கு, அவர் வேதத்தின் மீது பிரியம் கொண்டிருந்தார்.
ஜட்சனை ஒரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றும் போது அங்கே தலையணை அனுமதிக்கப்படவில்லை. சிறை அதிகாரி அதை வீசியெறிய, வெளியில் போய் விழுந்தது. அதைக் கண்ட ஜட்சன் வேதனையால் தேம்பி அழுது மரித்துப் போனார்.
ஆனால், கர்த்தர் அந்த வழியாக ஒரு கிறிஸ்தவரை அனுப்பினார். அவர் தன்னையும் அறியாமல் கீழே கிடந்த தலையணையை எடுத்துப் பிரித்தார். உள்ளம் பரவசம் அடைந்தது. தனது மொழியிலேயே வேதப் புத்தகம் இருப்பதைக் கண்டு ஆண்டவருக்கு நன்றி தெரிவித்தார். மிக அதிக பொருட்செலவு செய்து அதை மறுபிரதி எடுத்தார்.
இப்போது, அதே பைபிள் தான், வேதாகம சங்கத்தார் மூலம், பர்மிய மொழியில் பல லட்சமாக அச்சடிக்கப்பட்டு வெளிவருகிறது.
மனிதன் போடும் திட்டம் ஜெயிக்குமா தோற்குமா என சொல்ல முடியாது. ஆனால், தேவனின் திட்டத்தை தடுப்பவர் யாருமில்லை.
ஜட்சன் என்ற தேவ மனிதருக்கு வேதத்தின் மீதிருந்த ஆர்வம் உங்களுக்குப் புரிகிறதா? சொந்த மொழியில் வேதத்தை கண்டெடுத்த மனிதரின் நன்றி உணர்வு உங்களுக்கு வெளிப்படுகிறதா? இன்று வேதத்திற்கும் உங்களுக்குமிடையே நல்ல உறவு நிலை இருக்கிறதா? தமிழில் வேதம் தந்த தேவனுக்கு உங்கள் இருதயம் நன்றி சொல்கிறதா?