
1956ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து 5 மிஷனரிகள் எந்த வித வசதியும் இல்லாத 'ஈக்வேடர்' என்னுமிடத்திற்கு வந்து ஊழியம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த பழங்குடியினரால் கொல்லப் பட்டனர். ஏரி ஒன்றில் இந்த ஐந்து பேருடைய சடலங்கள் வீசி எறியப்பட்டு மிதந்து கொண்டிருந்தது. இந்த
சம்பவத்திற்குப் பிறகு ஊழியர்கள் இங்கு செல்ல தயங்கினார்கள். இந்த நிலையில் கொலை செய்யப் பட்டவர்களில் ஒரு மிஷனரியின் மனைவி, தன் இரு சிறு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு பழங்குடியினரின் மத்தியில் வந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொண்டார்.
நாகரிகமற்ற அந்த பழங்குடியினர் ஒருவர் மீது ஒருவர் கோபம் வந்து விட்டால் விஷம் தடவப்பட்ட ஈட்டியை எறிந்து கொல்லும் வழக்கம் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களையும், அந்த பெண்ணின் அன்பு கிறிஸ்துவுக்காக வென்றது. அங்கே ஐந்து மிஷனரிகளை கொன்ற கொலையாளிகள் இருவர் ரட்சிக்கப்பட்டார்கள். பின் அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டனர். வேதாகமம் பற்றி அறிந்து கொள்ள மிஷனரி மனைவிமூலம் வட அமெரிக்காவுக்கு சென்று, வேதாகமக் கல்லூரியில் படித்து விட்டு மீண்டும் தாயகம் திரும்பினர். இதனிடையில், அந்த மிஷனரியின் இரு பிள்ளைகளும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டிய பருவம் அடைந்திருந்தனர்.
மிஷனரி பிள்ளைகள் இருவரும் கொலைகாரனாயிருந்து சுவிசேஷகராக மாறின தேவ ஊழியர்களின் கரங்களால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். ஆச்சரியமாய் இருக்கிறதா?
இது தான் உண்மையான மன்னிப்பாகும். உலகம் இன்றும் கிறிஸ்துவினிடம் திரும்பாதிருப்பதற்கு காரணம், நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்க மனமில்லாமல் இருப்பதே. மன்னிக்கிற ஒரு தேவனை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், அவரை நாம் உலகத்திற்கு அறிமுகப்படுத்தவில்லை. நம்முடைய வாழ்க்கையில், நடைமுறையில் தேவனுடைய மன்னிக்கும் அன்பை காண்பிக்காத பட்சத்தில் உலகம் எவ்வாறு 'மன்னிக்கிற தேவனை' அறிந்து கொள்ள இயலும்?
மற்றவர்களுடைய தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் அவரைத் தண்டியாமல் விடுவிப்பதே மன்னிப்பு. நாம் செய்த அக்கிரமங்களையும், கொடிய குற்றங்களையும் தேவன் மன்னித்துள்ளார். காரணம், அவர் மன்னிக்கிற தெய்வம். இன்றைக்கும் மனுஷரை மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார். தேவனிடத்தில் மன்னிப்பை பெற்ற நாம், மற்றவர்களையும் மனப்பூர்வமாய் மன்னிக்க வேண்டுமென விரும்புகிறார். மன்னிப்புக்கு வரையறை ஏதுமில்லை.(மத்.18:22.35, லூக்.17:4)
மன்னிக்கும் சிந்தையுற்றவன் தேவனை உண்மையாய் பின்பற்றுகிறவன்(மத்.5: 43-48) தேவனிடத்தில் இலவசமாய் பெற்ற மன்னிப்பை இலவசமாய் மக்களுக்கு கொடுக்கலாமே! எந்த பிரச்னையானாலும் தேவன் நியாயம் தீர்க்கட்டும். நாம் அந்த பிரச்னைக்குரிய நபரை மன்னித்து மனதார ஏற்றுக் கொள்வோம்.