ADDED : அக் 08, 2014 04:24 PM

சீனாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எரிக்ஹென்றி. தினமும் அதிகாலையே எழுந்து ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, உடற்பயிற்சி செய்வது அவரது வழக்கம்.
ஒலிம்பிக் பந்தய ஓட்டத்தில் 100 மீட்டர் போட்டியில் எரிக்ஹென்றி களம் இறங்கி முதல் பரிசினைப் பெற்று பல பட்டங்களையும், பதக்கங்களையும் வென்று சீனாவிற்குப் பெருமை சேர்த்தார். இப்படிப்பட்ட நிலையில், '200 மீட்டர் ஓட்டப் பந்தயம்' ஒலிம்பிக் குழுமத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது. இதில் எரிக் ஹென்றி பங்கு பெற்று வெற்றி பெறுவார் என்பது நாடே எதிர்பார்த்து இருந்தது. ஹென்றிக்கும் இப்போட்டியில் பங்கு பெற ஆசை. ஆனால், போட்டி நடைபெறும் நாள் ஞாயிற்றுக்கிழமை என அறிந்ததும் போட்டியா? ஆலயமா? என்ற குழப்பம் அடைந்தார்.
சீனாவின் முக்கிய பிரமுகர்கள் இவரைப் போட்டியில் பங்கு பெற உற்சாகப்படுத்தினார்கள். ஆனால், ஹென்றியோ,''ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக'' என்று சொன்ன ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிவதா? அல்லது பிரமுகர்களின் உற்சாக வார்த்தைக்கு கீழ்ப்படிவதா? என சிந்தித்து முடிவெடுத்தார். ஓட்டப்பந்தயத்தில் ஓடி கனமடைவதை (பெருமைப்படுவதை) விட, ஆலயத்தில் தேவனை ஆராதித்து பெருமைப்படுவதையே மேலாகக் கருதி ஆலயத்திற்குச் சென்றார். போட்டியில் பங்கேற்காததால், பலரும் இவரை பிழைக்கத் தெரியாதவர் என்று சொல்லி நிந்தித்து வசை மொழி பாடினர். ஹென்றி இவைகளைக் கண்டு கொள்ளவே இல்லை.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. ஹென்றி இப்போட்டியில் பங்கேற்க தன் பெயரைப் பதிவு செய்தார். போட்டி நடத்துபவர்கள் இவரை 100 மீட்டர், 200 மீட்டர் என வரிசையாக விளையாடினால் தான், இப்போட்டியில் வெற்றி பெற முடியும். எனினும் அவரது ஆர்வ மிகுதியால் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தருவதாகக் கூறினர்.
400 மீட்டர் ஓட்டப் பந்தயக் களத்தில் ஹென்றி வந்து நின்றார். 100 மீ, 200மீட்டர் ஓட்டப்பந்தய பிராக்டிஸ் இல்லாததால், இவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று எல்லாரும் நினைத்தனர். இருந்தாலும், அனைவரும் வியக்கும் விதத்தில் ஹென்றி வெற்றி பெற்றார். அதற்கான காரணத்தை அவர்கள் அறிய விரும்பினர். பத்திரிக்கையாளர் ஹென்றியிடம், ''நீங்கள் வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன?'' என்று கேட்டபோது, ''200 மீட்டர் ஓட்டப்பந்தய நாளான ஞாயிறன்று போட்டிக்குப் போகாமல், சர்ச்சுக்குப் போய் ஆராதனைக்கு முக்கியத்துவம் அளித்ததே இதன் ரகசியம்,'' என்றார்.
அருமை மக்களே! நாம் ஒவ்வொருவரும் ஞாயிறு ஆராதனையை முக்கியத்துவப்படுத்துவோம். வாழ்வில் முன்னேறுவோம். ''உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கட்டளைஇட்டபடியே, ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக'' (உபாகமம் 5:12) ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமை ஆராதனையை அற்பமாய் எண்ணிவிடாமல் சரியான நேரத்தில் பங்குபெறுங்கள். அற்புதம் சரியான நேரத்தில் நடைபெறும் என்பதில் சந்தேகம்இல்லை.