ADDED : ஏப் 22, 2013 12:44 PM
90 வயது நிரம்பிய முதியோர் பலரிடம்,'' இந்த வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் துவங்கி வாழ சந்தர்ப்பம் கிடைக்குமென்றால், எப்படி வாழ்வீர்கள்?'' என்று கேட்கப்பட்டது.
''நிச்சயமாக நல்ல முறையில் வாழ்வோம். யார் மீதும் கோபம், கசப்பு, வெறுப்புணர்வு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்,'' என்று பதிலளித்தனர்.
''போ, இனி பாவம் செய்யாதே'' (யோவா.8:11) என்று இயேசுகிறிஸ்து, பாவியான ஸ்திரீயிடம் கூறியபோது, இவ்வாறு ஒரு புதுவாழ்வைக் குறித்தே சொன்னார். நமது கடந்த கால பாவங்களை அவர் மன்னிப்பதும், புது சிருஷ்டியாக மாறச் சொல்வதும், நமக்கு ஒரு புதிய சந்தர்ப்பம் தருவதற்கே.
பாவத்திலிருந்து இரட்சிப்பு (மன்னிப்பு) பெற்ற பலரும், மீண்டும் பழைய வாழ்க்கையையே தொடர்வதால், புது சிருஷ்டி பெற வேண்டிய நன்மைகளை இழந்து போகின்றனர். ''பழையவைகள் ஒழிந்து போயின.
எல்லாம் புதிதாயின'' என்பதே புதுசிருஷ்டியின் அழைப்பு.
ஒரு அழகிய வண்ணத்துப்பூச்சியிடம்,''நீ மீண்டும் ஒரு புழுவாக வாழ விரும்புகிறாயா?'' என்று கேட்டால், அது நிச்சயம் மறுத்துவிடும். இப்பொழுது, அதன் வண்ணம் வேறு, உருவம் வேறு, உணவு வேறு. எல்லாம் புதிதாகி விட்டது. அதுபோல, நமக்கு அளிக்கப்படும் புதுவாழ்வின் தன்மையே வேறு என்பதை உணரும்போது சந்தோஷமடைவோம்.