ADDED : ஏப் 22, 2013 12:45 PM

இரண்டாம் உலகப்போர் நடந்த நாட்களில் நேசநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிலர், ஜப்பானியரிடம் கைதிகளாயினர். தினமும் ஒவ்வொரு கைதியிடமும் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து, நிலத்தில் வேலை செய்யச் சொல்வார்கள். வேலை முடிந்ததும், கைதிகளையும் மண்வெட்டிகளையும் எண்ணி சரி பார்ப்பார்கள்.
ஒருநாள், வெள்ளைக்கார கைதிகள் வேலை செய்து முடித்ததும், அவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வீரன் மண்வெட்டிகளை எண்ணினான். கைதிகள் 40 பேர். ஆனால், 39 மண்வெட்டிகளே இருந்தன. கோபத்துடன், கைதிகள் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து, ''யார் அந்த ஒரு மண்வெட்டியை மறைத்து வைத்தது? அது என் கைக்கு வராவிட்டால், உங்கள் எல்லாரையும் சுட்டுக்கொன்று விடுவேன். அதற்கு எனக்கு அதிகாரமிருக்கிறது,'' என கத்தினான்.
கைதிகள், ''நானல்ல, நானல்ல,'' என்று பதிலளித்தனர். வீரனின் கோபம் அதிகமாயிற்று. ''எல்லாரையும் சுடப்போகிறேன், உண்மையைச் சொல்லுங்கள்,'' என்று மீண்டும் எச்சரித்தான்.
அப்போது ஒரு ஸ்காட்லாந்து வீரர் முன்வந்து,''நான் தான் எடுத்தேன்,'' என்றார்.
''அதை எங்கே வைத்திருக்கிறாய்?'' என்று கூட கேட்காத வீரன், துப்பாக்கியின் விசையை அழுத்தினான். அந்த வீரர் இறந்தார்.
தன் கடமையை சரியாகச் செய்துவிட்ட மகிழ்ச்சியில், கைதிகளை மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு சிறைக்குச் செல்ல கட்டளையிட்டான். எல்லாரும் எடுத்த பிறகு, ஒரு மண்வெட்டி எடுக்க ஆளின்றி கிடந்தது. ஜப்பானிய வீரன் தன் அவசர புத்தியை எண்ணி தலை குனிந்தான். 39 பேரின் உயிரைக் காக்க, தன் உயிரை இழந்த அந்த இளம்வீரனின் தியாகத்தை எண்ணி மற்ற கைதிகள் கண்ணீர் விட்டனர்.
சிலர் ''நண்பனே, நீ எனக்காக மரித்ததால் நான் ஜீவிக்கிறேன்,'' என்றனர்.
அதுபோல, முழு மனுகுலத்தின் பாவத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு, தன் உயிரைத் தியாகம் செய்து, சிலுவையில் கொடூர மரணத்தைச் சந்தித்தாரே! அந்த இயேசுகிறிஸ்துவை நினைத்து என்றாவது நீங்கள் கண்ணீர் விட்டதுண்டா?